மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

தாய்லாந்து: வெற்றிகரமாக முடிந்த மீட்புப்பணி!

தாய்லாந்து: வெற்றிகரமாக முடிந்த மீட்புப்பணி!

தாய்லாந்திலுள்ள தாம் லுவாங் குகையில் சிக்கிய 13 பேர் வெளியேறிய நிலையில், அதனுள் இருந்த மூன்று டைவிங் வீரர்கள் மற்றும் ஒரு மருத்துவர் நேற்றிரவு வெற்றிகரமாக வெளியே அழைத்துவரப்பட்டனர். இறுதிக்கட்டத்தில் குகைக்குள் நீர்மட்டம் உயர்ந்ததால் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் பீதிக்குள்ளானதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்து சியாங் ராய் மாகாணத்திலுள்ள தாம் லுவாங் குகையில் சிக்கிய 13 பேரும், நேற்று (ஜூலை 10) பத்திரமாக மீட்கப்பட்டனர். இதன் மூலமாக, சுமார் 18 நாட்கள் நடந்த உணர்வுப் போராட்டம் முடிவுக்கு வந்தது. மீட்கப்பட்ட சிறுவர்களின் குடும்பத்தினர் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தாய்லாந்து மக்களும் இந்த மீட்பு நடவடிக்கையைக் கொண்டாடினர். சமூக வலைதளங்களிலும் இந்த மகிழ்ச்சி எதிரொலித்தது.

நேற்று நடந்த மீட்பு நடவடிக்கையின்போது, 12வது சிறுவனை வெளியே அழைத்துவந்தபிறகு தாம் லுவாங் குகைக்குள் நிலைமை முற்றிலுமாக மாறியது. குகைக்குள் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை மீட்புப் பணியாளர்கள் இருந்தனர். திடீரென்று குகைக்குள் இருந்த நீரை வெளியேற்றிய மோட்டார் பம்பில் கோளாறு ஏற்பட்டது. அதன் இயக்கம் நின்றுபோனதால், குகைக்குள் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. இதனால், அங்கிருந்த மீட்புப் படையினரில் சிலர் அலறினர். உலர்ந்த நிலத்தை அடைய, அவர்களில் சிலர் முயற்சித்தனர்.

இந்த அலறலைத் தாங்கள் கேட்டதாகக் கூறியுள்ளனர் குகையில் இருந்து இறுதியாக மீட்டெடுக்கப்பட்ட மூன்று டைவிங் வீரர்கள். ஸ்கூபா முகமூடிகளை அணிந்து சுவாசிப்பது எப்படி மற்றும் குகை வளைவுகளைக் கடந்து செல்வது எப்படி என்பது பற்றி, பயிற்சியாளர் சாண்ட்வாங் மற்றும் குகையில் சிக்கிய 12 சிறுவர்களுக்கு இவர்களே பயிற்சி அளித்தனர். எரிக் ப்ரவுன், மிக்கோ பாஸி மற்றும் கிளாஸ் ரஸ்முஸன் என்ற இவர்களது பெயர் மற்றும் அடையாளம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களோடு, ஆஸ்திரேலிய மருத்துவர் ரிச்சர்ட் ஹாரிஸும் குகையிலிருந்து நேற்று மீட்கப்பட்டார். தாம் லுவாங் குகைக்குள் சென்ற அனைவரும் மீட்கப்பட்டதால், குகை வாசலில் இருந்தவர்கள் இந்த நடவடிக்கைக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த மீட்பு நடவடிக்கை முடிந்த சில மணி நேரங்களில் ரிச்சர்ட் ஹாரிஸின் தந்தை ஜேம்ஸ் ஹாரிஸ் மரணமடைந்தார். இவர் ஆஸ்திரேலியாவிலுள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் வாஸ்குலர் சர்ஜனாகப் பணியாற்றியவர். மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்கள், இதற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon