மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

இந்திய மருந்துகளின் வரியைக் குறைக்கும் சீனா!

இந்திய மருந்துகளின் வரியைக் குறைக்கும் சீனா!

இந்திய மருந்துகளுக்கான வரியைக் குறைக்க சீனா ஒப்புக் கொண்டுள்ளது.

சீனாவுக்கு மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்காகச் சீன அரசுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் படி சீனாவுக்கு மருந்துப் பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் விதமாக வரியைக் குறைக்க சீன அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள், குறிப்பாக புற்றுநோய் மருந்துகளுக்கு வரியைக் குறைக்க இந்தியாவுடன் சீனா ஒப்பந்தம் இட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளது.

சீனாவில் ஆண்டுக்கு 43 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் சீனாவில் வெளியான திரைப்படம் ஒன்றும் புற்றுநோய்க்கான மருந்துகள் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை குறித்து வெளிக்காட்டியது. இவையெல்லாம் சீனாவில் புற்றுநோய் மருந்துகளுக்கான தேவை மிக அதிகமாக இருப்பதையே காட்டுகின்றன. இதைத் தொடர்ந்துதான் இந்தியாவிடமிருந்து புற்றுநோய்க்கான மருந்துகளைச் சீனா அதிகளவில் இறக்குமதி செய்ய வரிச் சலுகை அளிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இருப்பினும் இதற்காக இந்திய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது குறித்து தெளிவான விவரங்கள் இன்னும் குறிப்பிடப்படவில்லை.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை 84 பில்லியன் டாலர்களாக உள்ளது. சீனாவுக்குச் செல்லும் பொருட்களைவிட, சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் பொருட்களின் அளவுதான் அதிகமாக உள்ளது. எனவே வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான முயற்சியிலும் ஒன்றிய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையை 51 பில்லியன் டாலர்களாகக் குறைக்க வேண்டுமென்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவும் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியை உயர்த்துவதற்கு இந்தியா முயற்சித்து வருகிறது.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon