மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

கோழி வளர்ப்பைப் பாதித்த ஆதரவு விலை!

கோழி வளர்ப்பைப் பாதித்த ஆதரவு விலை!

காரிஃப் பயிர்களுக்கான ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளதால், கோழிப் பண்ணை மற்றும் கால்நடை வளர்ப்புக்கான செலவுகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு சமீபத்தில் காரிஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி அறிவித்திருந்தது. அதில் சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 19 சதவிகிதமும், சோயாபீனுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 11 சதவிகிதமும் உயர்த்தப்பட்டிருந்தது. இந்தியாவில் மொத்த சோளம் உற்பத்தி 26.88 மில்லியன் டன்னாக இருக்கும் நிலையில், இதில் 70 சதவிகிதம் அளவு கோழி மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையால் நுகரப்படுகிறது. எனவே, சோளம் மற்றும் சோயாபீனுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளதால் அவற்றின் சந்தை விலை உயர்ந்து, தீவனச் செலவுகள் அதிகரிக்கும் என்று பெங்களூருவை மையமாகக் கொண்ட ’எம்.எம்.ஏ. இண்டக்ரேட்ஸ்’ கோழி வளர்ப்புத் தீவன நிறுவனத்தைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர் பிசினஸ் லைன் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தானியங்களின் விலை குறைவாக இருந்ததால் தீவனச் செலவுகளில் மிகப்பெரிய பாதிப்பு எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது சோயாபீனின் விலை 22 சதவிகிதம் வரையில் அதிகரித்துள்ளது. சோளத்தின் விலையும் சர்வதேச விலையை விட அதிகமாக இருக்கிறது. கால்நடைத் தீவன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான சவுந்தர ராஜனைப் பொறுத்தவரையில், “விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதற்காகக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்திய அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், சோளம் மற்றும் சோயாபீனுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளதால் எங்களது துறைக்கு பாதிப்பு ஏற்படும். இதன் விளைவாக எங்களால் சர்வதேச அளவில் போட்டியைச் சந்திக்க இயலாது” என்று கூறியுள்ளார்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon