மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

அமரர் ஊர்தி மறுப்பு: பைக்கில் உடல் பயணம்!

அமரர் ஊர்தி மறுப்பு: பைக்கில் உடல் பயணம்!

மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்தி வழங்க மறுத்ததால் இறந்த தாயை பிரேதப் பரிசோதனைக்காக, இருசக்கர வாகனத்தில் மகன் கொண்டு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று (ஜூலை 10) பரவலாக பரவியது. இதனைத் தொடர்ந்து, நடந்த விசாரணையில், அந்தச் சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஹரியானா மாநிலம் மஸ்தபூர் கிராமத்தில் வசித்து வருபவர் குன்வர் பாய். இவர் கடந்த ஞாயிற்றுகிழமை (ஜூலை 8) பாம்பு கடித்து மயங்கி விழுந்துள்ளார். அப்போது, அவரை உடனடியாக அருகிலுள்ள மொஹங்கரத் என்ற சுகாதார மையத்துக்கு அவரின் மகன் ராஜேஷ் கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரின் மகன் தாயின் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் அமரர் ஊர்தி கேட்டுள்ளார். ஆனால், நிர்வாகம் தர மறுத்துள்ளது. இதையடுத்து இறந்த தாயின் உடலை, உறவினர் ஒருவரின் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் 35 கிலோ மீட்டர் பயணம் செய்து பிரேதப் பரிசோதனை செய்யும் இடத்துக்கு ராஜேஷ் கொண்டுசென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் அபிஜித் அகர்வால் கூறுகையில், “ராஜேஷ், அவரின் தாய்க்கு பாம்பு கடித்ததும் மருத்துவமனைக்கு எடுத்துவராமல் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையில் கோயிலுக்கு எடுத்துச் சென்றுள்ளார். அவர் மருத்துவமனைக்குத் தாமதமாகக் கொண்டுவந்த காரணத்தால்தான் மருத்துவர்களால் அவரின் தாயைக் காப்பாற்ற முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon