மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

மத்திய, மாநில அரசுகளுக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்!

மத்திய, மாநில அரசுகளுக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்!

டெல்லியில் குப்பைகளால் ஏற்படும் மாசுபாட்டிற்கும், மும்பையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதற்கும் காரணமாக இருக்கிற மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கான கொள்கையை வகுக்க வேண்டும் என 2016 ஆம் ஆண்டு,ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று(ஜூலை 10) நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் ஏன் தாமதம் ஏற்பட்டது. டெல்லியில் ஓக்லா, பால்ஸ்வா, காஜிப்பூர் ஆகிய 3 இடங்களிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அதனை அகற்றுவதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இதை விட்டு விட்டு யாருக்கு அதிகாரம் என்று அதிகாரப்போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அரசின் கையாளாகாத தனத்தால் டெல்லி குப்பைக்குள் புதைந்து கொண்டிருக்கிறது. இந்த மூன்று பகுதிகளிலும் இருக்கிற குப்பைகளை அகற்றுவது யார் பொறுப்பு என்பதை டெல்லி அரசு தெரிவிக்க வேண்டும். மும்பையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. இதுவரை மத்திய அரசும், மாநில அரசும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் தலையிட்டு ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால், வார்த்தைகளால் நாங்கள் தாக்கப்படுகிறோம் என்றனர்.

13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களும் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை. இதனால், கோபமடைந்த நீதிபதிகள், பிகார், சத்தீஸ்கர், கோவா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா, மேகாலயா, பஞ்சாப், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகியவற்றிற்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதனால், பெயர் வெளியிடப்படாத மீதமுள்ள மாநிலங்களுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

இறுதியாக இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பையும் பயன்படுத்த தவறினால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளரை அழைத்து, ஏன் மாநிலங்களால் இந்த உத்தரவைப் பின்பற்ற முடியவில்லை என்பதைக் கேட்க நேரிடும் என தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon