மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

பெல்ஜியத்தை முட்டித்தள்ளிய பிரான்ஸ்!

பெல்ஜியத்தை முட்டித்தள்ளிய பிரான்ஸ்!

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நேற்று (ஜூலை 10) நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் பிரான்ஸ் அணி பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

பிரான்ஸ்-பெல்ஜியம்

இந்த உலகக் கோப்பையில் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக பெல்ஜியம் அணி கருதப்பட்டிருந்தது. காரணம், அந்த அணியின் ஹசார்ட், டி ப்ருய்ன், லுகாகு, வெர்டோங்கன், கோர்டுவா என பெரும்பாலான வீரர்கள் ப்ரீமியர் லீக் தொடரில் முத்திரை பதித்த நட்சத்திர வீரர்கள். அதோடு பயிற்சியாளர் ராபர்டோ மார்டினஸ் அந்த அணியின் மிகப்பெரிய பலம் எனலாம்.

பிரான்ஸ் அணியைப் பொறுத்தவரை, பார்வேர்ட்ஸ், மிட் ஃபீல்ட், டிஃபென்ட்ஸ் என அனைத்திலும் சமபலத்துடன் உள்ளது. எம்பாப்வே, கிரீஸ்மேன், போக்பா, ஆலிவர் கிரவுட் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளனர்.

இந்தநிலையில் இரவு 11.30க்கு போட்டி தொடங்கியது. முதல் கால் மணி நேரத்திலேயே போட்டியில் அனல் பறந்தது. 16ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்திற்கு கோல் அடிக்க அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பெல்ஜியம் அணி கேப்டன் ஹசார்ட் அடித்த அந்த பந்து கோல் கம்பத்தை உரசிக்கொண்டு வெளியே சென்றதால் நூலிழையில் கோல் வாய்ப்பு பறிபோனது.

ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்துக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தது.

ஆனால், பெல்ஜியம் வீரர் அடித்த பந்து வலையை நோக்கி வர, மின்னல் வேகத்தில் வலது பக்கம் பறந்து பிரான்ஸ் அணியின் கேப்டனும் கோல் கீப்பருமான லோரிஸ் அந்தப் பந்தினைத் தடுக்க ஸ்டேடியமே ஆரவாரத்தால் அதிர்ந்தது. பரபரப்பாக போட்டி நடந்தாலும் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவேயில்லை.

அதன் பின்னர் தொடங்கிய 2ஆவது பாதியில் 69ஆவது நிமிடத்தில்தான் போட்டியின் முடிவையே தீர்மானிக்கும் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பிரான்ஸ் வீரர் உம்டிடி கார்னர் ஷாட்டை தனது தலையால் முட்டித்தள்ளி அசத்தலான ஒரு கோல் அடிக்க, பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது. இதனால் பிரான்ஸ் ரசிகர்கள் உற்சாகமாகினர். அதன்பின்னர் கூடுதல் நேரம் கொடுத்தும் போட்டி முடியும்வரை பெல்ஜியத்திற்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை. ஆகவே இறுதியில் பிரான்ஸ் அணி 1-0 என பெல்ஜியத்தை வென்று இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளது.

முதல் பாதியில் கிடைத்த அருமையான சில கோல் வாய்ப்புகளை பெல்ஜியம் வீணடித்தது அந்த அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon