மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

தாய்லாந்து: மருத்துவக் கண்காணிப்பில் மீட்கப்பட்டவர்கள்!

தாய்லாந்து: மருத்துவக் கண்காணிப்பில் மீட்கப்பட்டவர்கள்!

தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட 13 பேரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் ஒரு வாரக் காலம் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை மீட்க உதவிய மூன்று டைவிங் வீரர்கள் மற்றும் ஒரு மருத்துவரை மீட்கும் நடவடிக்கைகள் நேற்று நிறைவடையவில்லை.

தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் மாட்டிக்கொண்ட 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங் உட்பட அனைவரும் நேற்று (ஜூலை 10) மீட்கப்பட்டனர். கடந்த 8 மற்றும் 9ஆம் தேதிகளில் மீட்கப்பட்ட எட்டு சிறுவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களைச் சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர். இந்தச் சிறுவர்களுக்கு ரத்தப் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே சோதனைகள் நடத்தப்படவுள்ளது. இவர்கள் அனைவரும் சுமார் ஒரு வாரக் காலம் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார்கள் என்று அறிவித்துள்ளது தாய்லாந்து அரசு. இவர்களோடு நேற்று காப்பாற்றப்பட்ட 5 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கையின்போது, மிகவும் பலவீனமாக இருந்தவர்கள் கடைசியாக மீட்டெடுக்கப்பட்டதாகத் தாய்லாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங் தனக்கு அளிக்கப்பட்ட உணவைச் சிறுவர்களுக்கு அளித்து வந்ததால், அவர் மிகக் கடுமையாக உடல் நலிவடைந்திருந்தார். இவர் முன்னர் புத்த பிட்சுவாகவும் இருந்தவர் என்பதால், குகைக்குள் இருந்தபோது சிறுவர்கள் தியானம் செய்ய வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

தாய்லாந்து குகைக்குள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களைப் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிறுவர்களுக்கு டைவிங் பயிற்சியளித்த மூன்று டைவிங் வீரர்கள் மற்றும் ஒரு மருத்துவரைக் காப்பாற்றும் முயற்சிகள் நடந்துவருவதாகத் தகவல் வெளியானது. இவர்கள் இன்று வெளியே அழைத்துவரப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon