மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

சிவாவை எதிர்கொள்ள அஞ்சும் சிங்கம்!

சிவாவை எதிர்கொள்ள அஞ்சும் சிங்கம்!

திரையரங்குகளில் இந்த வாரம் இயக்குநரும் கதாநாயகனும் மோதத் தயாராகிவருகின்றனர். தன் சக நிர்வாகியான நடிகர் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு, வேறு படங்கள் போட்டியாகக் களமிறங்கிவிடாமல் இருக்க, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை நடிகர் சங்க செயலாளர் விஷால் பயன்படுத்துகிறார் என்கிற குற்றசாட்டு எழுந்துள்ளது.

அதனை முறியடித்து ‘தமிழ் படம் 2’ இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. 2010இல் தமிழ் படம் ரிலீஸ் ஆகும் வரை அந்தப் படத்தை ஒரு பொருட்டாக எவரும் எடுத்துக்கொள்ளவில்லை. சினிமாவைப் பகடி செய்து எடுக்கப்பட்ட தமிழ் படத்தை ரிலீஸுக்கு முதல் நாள், அன்றைய திமுக பிரமுகர் மு.க.அழகிரிக்கு மதுரையில் பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்தனர்.

கோவா, ஜக்குபாய், தைரியம் படங்கள் ரிலீஸ் அன்று தமிழ் படம் ரிலீஸ் என்பதால் தமிழகம் முழுவதும் தியேட்டர் கிடைப்பது சிரமமாக இருந்தது. அழகிரி படம் பார்த்த பின் தென் மாவட்டங்களில் அன்றைய ஆளும் கட்சி நிர்வாகிகள் தமிழ் படத்திற்கு தியேட்டர் ஒதுக்கீடு செய்ய திரையரங்க முதலாளிகளுக்கு அழுத்தம் கொடுத்தனர். அதனால் புதுமுகம் குமரன் நடித்த தைரியம் படத்தைத் திரையிட வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட திரையரங்குகள் ஆளும் கட்சியின் அழுத்தத்தைக் கூறி அந்தப் படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழ் படத்தைத் திரையிட்டனர்.

அழகிரியின் மகன் துரை தயாநிதி தமிழ் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் இது போன்ற அத்துமீறல், அதிகார அழுத்தங்கள் படத்திற்கு தியேட்டர் கிடைக்க வழிவகுத்தன. தமிழ் சினிமாவைக் கிண்டலடிக்கும் படமாக இருந்ததால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று கல்லா கட்டியது. எட்டு வருடங்களுக்குப் பின் அதே தலைப்பில் இரண்டாம் பாகத்தில் இந்திய சினிமா, தமிழக, இந்திய, உலக அரசியலையும் பகடி செய்து எடுக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை அப்படத்தின் விளம்பரங்கள் உணர்த்துகின்றன.

கடந்த ஆறு மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. இப்படங்களுக்கு பிரம்மாண்டமான விளம்பரங்கள், வித்தியாசமான விளம்பர யுக்திகள் கையாளப்பட்டு ரசிகனது கவனத்தை பெருமளவு ஈர்க்க முடியவில்லை. தமிழ் படம் - 2 படத்திற்கு நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்களை பகடி செய்து வெளியிடப்பட்ட போஸ்டர்கள் சினிமா பார்க்காதவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை நட்சத்திர விடுதியில் இருந்து தெருவோர டீக்கடை வரை நடைபெறும் உரையாடல்களில் கேட்க முடிகிறது.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள் சிவா தனியாக நடித்து வெளியான எந்தப் படமும் கடந்த எட்டு ஆண்டுகளில் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படமாக இருந்ததில்லை. ஆனால் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் நாளை தியேட்டர்களில் இருக்கும் என்கிறது தியேட்டர் வட்டாரம். இது போன்ற படங்களுக்கு அதிகாலை காட்சிகள் திரையிட மாட்டார்கள். ஆனால் தமிழ் படம் 2-க்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்புக் காட்சி என அறிவித்து அதகளம் செய்திருக்கிறார் இயக்குனர், அதுவும் பட விளம்பரத்திற்குப் பயன்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் கடைக்குட்டி சிங்கம் படத்தை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. நடிகர் சூர்யா தயாரிப்பில் அவரது தம்பி கார்த்தி நாயகனாக நடித்திருக்கும் கடைக்குட்டி சிங்கம் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ளது. தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பின் கிராமத்து விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், சிவாவின் படத்தை எதிர்கொள்ளத் தயங்குகிறது. அதனால் அப்படத்தை ஒரு வார காலம் கழித்து வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியும், திட்டமிட்டபடி நாளை ரிலீஸ் என்பதில் உறுதியாக இருக்கிறது தமிழ் படம் 2 படக்குழு.

இரு தரப்புக்கும் ஆளுங்கட்சி, அதிகார பலம் இல்லை. சுய பலத்தில் மோத வேண்டிய நிர்பந்தம். சங்க அதிகாரத்தை பயன்படுத்த முயற்சித்தது விஷால் தரப்பு. எந்த பலனும் இல்லை. ஒரு நாள் முன்னதாகவே தமிழ் படம் 2 ரிலீஸ் ஆகிறது. நாளை அப்படத்தின் வெற்றி உறுதியாகிவிட்டால் கடைக்குட்டி சிங்கம் கல்லா கட்ட கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon