மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

சுற்றுலா: இலவச சிம் கார்டு திட்டம் நிறுத்தம்!

சுற்றுலா: இலவச சிம் கார்டு திட்டம் நிறுத்தம்!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச சிம் கார்டு வழங்கும் திட்டத்தை இந்தியா நிறுத்துக் கொள்வதாக சுற்றுலாத் துறை செயலாளர் ராஷ்மி வர்மா கூறியுள்ளார்.

முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சரான மகேஷ் சர்மா 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இலவச சிம் கார்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்படி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வந்தவுடன் அவர்களுக்கு பி.எஸ்.என்.எல். சிம் கார்டு இலவசமாக வழங்கப்படும். இந்த கார்டில் 50 ரூபாய் டாக் டைம் மற்றும் 50 எம்.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 30 நாட்களாகும். அதேபோல சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இது ரஷியன், ஜெர்மன் மற்றும் ஜப்பனீஸ் உள்ளிட்ட 14 மொழிகளில் இயங்குகிறது.

இந்நிலையில் ஜூலை 9ஆம் தேதி இதுகுறித்துக் கூறிய சுற்றுலாத் துறை செயலாளர் ராஷ்மி வர்மா, "வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த இலவச சிம் கார்டு திட்டம் இனி நிறுத்தப்படுகிறது. இந்த சிம் கார்டு திட்டம் தேவையற்றது என்று உணர்ந்ததால்தான் நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சமூக வலைதளச் செயலிகள் மற்றும் வைஃபை வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவை பெரும்பாலான விமான நிலையங்களில் கிடைக்கின்றன" என்று கூறியுள்ளார். இலவச ஹெல்ப்லைனில் மேற்கொண்டு பல மொழிகளை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon