மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

நீட் கருணை மதிப்பெண்: தலைவர்கள் வரவேற்பு!

நீட் கருணை மதிப்பெண்: தலைவர்கள் வரவேற்பு!

நீட் தேர்வைத் தமிழில் எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளதற்குப் பல்வேறு தலைவர்களும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த மே மாதம் 6ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்குக் கேட்கப்பட்ட 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. இதனால், இந்தக் கேள்விகளுக்குத் தலா 4 மதிப்பெண் கருணை அடிப்படையில் வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் எம்.பி டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கில் நேற்று (ஜூலை 10) தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தவறாக மொழிபெயர்க்கப்பட்ட 49 வினாக்களுக்கான மதிப்பெண்ணை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும், புதிய தரவரிசைப் பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் தயார் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்புக்கு பல்வேறு தலைவர்களும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

திராவிடர் கழகத் தலைவர், கி.வீரமணி

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருந்தனர். நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் 49 தவறான கேள்விகள் இருந்ததால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கேள்வி ஒன்றுக்கு 4 மதிப்பெண் வீதம் 196 கருணை மதிப்பெண் அளித்துப் புதிய தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது - பாராட்டத்தக்கது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வரவேற்கத்தக்க மிகச் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது.பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட நீதி இது. கருணை மதிப்பெண் என்பதைவிட நியாயமாக அளிக்கப்பட வேண்டிய மதிப்பெண்ணே இவை என்பதுதான் சரியானது.

மேல்முறையீடு என்று கூறி, இந்த நியாயமான, மனிதாபிமான தீர்ப்பைப் புறந்தள்ளும் முயற்சியில் சிபிஎஸ்இ ஈடுபடக் கூடாது என்பதே சமூக நீதியாளர்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் விருப்பமும் கருத்துமாகும்.

பாமக நிறுவனர், ராமதாஸ்

மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும். தமிழ்வழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்யக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கான சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும்.

விசிக தலைவர், திருமாவளவன்

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். நீட் தேர்வை தமிழிலேயே எழுதக் கூடிய வசதி கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. 24,000க்கும் மேற்பட்டோர் தமிழில் நீட் தேர்வை எழுதினார்கள். ஆனால், வினாக்களைத் தமிழில் மொழிபெயர்க்கும்போது ஏராளமான குளறுபடிகள் நேர்ந்தன. 49 வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. அதனால் அந்த வினாக்களுக்கு மாணவர்கள் உரிய முறையில் பதிலளிக்க முடியவில்லை. தமிழில் தேர்வெழுதிய மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பை இழந்தனர். தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் அவர்களில் சிலர் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடும். அப்படிச் செய்தால் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களின் வாய்ப்பு பறிபோகும். எனவே, மேல்முறையீடு செய்யாமல் தமிழக அரசு சிபிஎஸ்இ அமைப்பைத் தடுக்க வேண்டும், உயர் நீதிமன்ற உத்தரவை முழுமையாக நிறைவேற்ற உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon