மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

2.O: ரிலீஸை உறுதிசெய்த ஷங்கர்

2.O: ரிலீஸை உறுதிசெய்த ஷங்கர்

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் 2.O படத்தின் வெளியீட்டுத் தேதியை இயக்குநர் ஷங்கர் அறிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. கிராபிக்ஸ் காட்சிகளும் ரஜினியின் வில்லத்தனமான நடிப்பும் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன. அந்தப் படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகும் எனத் தகவல்கள் வெளியாகின. 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பில் 2.O படத்தின் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. அதன் பின் ரஜினி, ரஞ்சித் இயக்கத்தில் கபாலி, காலா என இரு படங்களில் நடித்து அப்படங்கள் வெளியாகின. அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் படத்தின் வெளியீட்டுத் தேதி பல முறை மாற்றியமைக்கப்பட்டது.

கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கி வரும் நிறுவனம் குறிப்பிட்ட நாளில் தங்களது பணிகளை முடித்துக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளதால் படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதோடு படத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ஜூன் 7ஆம் தேதி காலா படம் வெளியான நிலையில் ஆறு மாத இடைவெளியில் ரஜினியின் மற்றொரு படம் வெளியாக உள்ளது. ரஜினி நடிப்பில் ஒரே ஆண்டில் இரு படங்கள் வெளியாவது சமீபகாலமாக அரிதான நிகழ்வாகவே இருந்து வருகிறது. 2014ஆம் ஆண்டு லிங்கா படமும் கோச்சடையான் படமும் வெளியானது. கோச்சடையான் படம் முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளால் உருவாகியிருந்தது. அதற்கு முன் ஒரே ஆண்டில் இரு ரஜினி படங்கள் வெளியானது 1995ஆம் ஆண்டு தான். பாட்ஷா, முத்து என இரு படங்கள் வெளியாகி வெற்றிபெற்றன.

​ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். பேராசிரியராக நடிக்கும் ரஜினி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார். அப்போது கல்கத்தாவிலுள்ள பெலூர் மடத்திற்குச் சென்று சுவாமி சமரானந்தா மகாராஜை சந்தித்து ஆசிபெற்றார்.

2.O போஸ்டர்

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon