மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

இந்தியா - தென்கொரியா: உயரும் வர்த்தகம்!

இந்தியா - தென்கொரியா: உயரும் வர்த்தகம்!

இந்தியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தக மதிப்பை 2030ஆம் ஆண்டுக்குள் 50 பில்லியன் டாலராக உயர்த்தும் நோக்கில் 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

உலகின் மிகப்பெரிய மொபைல் தயாரிப்பு ஆலையை (சாம்சங்) டெல்லிக்கு அருகில் தென்கொரியா சமீபத்தில் தொடங்கியது. நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் இந்த ஆலையைத் தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து ஜூலை 10ஆம் தேதி இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடையே பேசிய மூன் ஜே இன், “உலகின் மிக வேகமாக வளரும் சந்தையான இந்தியாவில் ஏற்கெனவே எங்களது நாட்டைச் சேர்ந்த சாம்சங், ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியைக் கொண்டுள்ளன. வரும் காலங்களில் இன்னும் அதிகமான கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யும் என்று நம்புகிறேன்” என்றார்.

தென்கொரியா மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு வர்த்தக மதிப்பு 2017-18ஆம் நிதியாண்டின் இறுதியில் 20.8 பில்லியன் டாலராக இருந்தது. இந்த மதிப்பை 2030ஆம் ஆண்டுக்குள் இரு மடங்குக்கு மேல் 50 பில்லியன் டாலராக உயர்த்த இரண்டு நாடுகளும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளன. ரயில்வே, சுகாதாரம், தொலைத் தொடர்பு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளன. ஏற்கெனவே இருந்த சில ஒப்பந்தங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், இரு நாடுகளும் கூட்டாக இணைந்து ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளில் தொழில்புரியவும் ஒப்பந்தம் செய்துள்ளன.

அடுத்த ஆண்டில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதில் மோடி வெற்றி பெறுவார் என சூசகமாகத் தெரிவித்துள்ள தென்கொரிய அதிபர், 2020ஆம் ஆண்டில் இந்திய பிரதமரின் தென்கொரிய வருகைக்குத் தான் காத்துக்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon