மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

தாஜ்மஹால் பேஷன் ஷோ: அனுமதி மறுப்பு!

தாஜ்மஹால் பேஷன் ஷோ: அனுமதி மறுப்பு!

தாஜ்மஹாலில் பேஷன் ஷோ நடத்த கிறிஸ்டியன் டியோர் என்ற நிறுவனம் அனுமதி கேட்ட நிலையில், இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனமானது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டிலுள்ள புகழ்பெற்ற பேஷன் நிறுவனமான கிறிஸ்டியன் டியோர், தாஜ்மஹாலில் ஒரு பேஷன் ஷோ நடத்த முடிவு செய்தது. பாரிஸில் உள்ள இந்திய தூதரகத்திடம் இதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. இது தொடர்பாக, இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ஏஎஸ்ஐ) பதிலளித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், இந்திய நினைவுச்சின்னங்கள் சிலவற்றில் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு வருகிறதென்றும், உலகின் புராதனமான சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தாஜ்மஹாலில் அந்த நடைமுறையைப் பின்பற்ற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“செங்கோட்டையில் உள்ளது போல, சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதைப் பாதிக்காத வகையில் நிகழ்ச்சி நடத்துவது தாஜ்மஹாலில் சாத்தியமல்ல” என்று ஏஎஸ்ஐயைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த மே மாதம் தாஜ்மஹாலைப் பராமரிக்கும் விவகாரம் தொடர்பாக ஏஎஸ்ஐயிடம் கேள்வி எழுப்பியிருந்தது உச்ச நீதிமன்றம். டெல்லியிலுள்ள செங்கோட்டை பராமரிப்புப் பணிகளை டால்மியா நிறுவனத்திடம் ஏஎஸ்ஐ ஒப்படைத்த நிலையில், தாஜ்மஹாலையும் அவ்வாறு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் திட்டமிட்டிருக்கிறதா என்று கேட்டிருந்தது.

1997ஆம் ஆண்டு தாஜ்மஹால் வளாகத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார் பிரபல இசையமைப்பாளர் யானி. இதுமாதிரியான நிகழ்ச்சிகளை தாஜ்மஹாலில் நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், ஒளி மற்றும் ஒலியமைப்பினால் தாஜ்மஹால் பாதிக்கப்படும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon