மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விடுங்கள்!

குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விடுங்கள்!

சிறுமி ஹாசினியைப் பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஜூலை 10) உறுதி செய்தது.

இந்தத் தீர்ப்பில் குறிப்பிட்ட இந்த வழக்கு பற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக இந்திய குழந்தை சமுதாயத்தின் தலையாய பிரச்னையைப் பற்றி எடுத்துக் கூறியிருக்கிறது நீதிமன்றம்.

தீர்ப்பில் நீதிமன்றம் கூறியிருப்பதாவது: “திருமணத்தின்போது மகளைப் பிரிவதையே பெற்றோர் சிரமமாகக் கருதும் நிலையில் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு, குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோரின் வலியை நீதிமன்றம் வெறும் வார்த்தைகளால் ஈடு செய்ய முடியாது. அந்த வலிக்கு எந்த ஒரு நிவாரணமும் வழங்க முடியாது.

மகிழ்ச்சியான, ஆரோக்கியமான குழந்தைப் பருவத்தை அனுபவிக்க அனைத்துக் குழந்தைகளுக்கும் அரசியல் சாசனம் உரிமை வழங்கியுள்ளது. ஆனால், குழந்தைகளின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத சமுதாயத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

மொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரின் மனநிலையின் கொடூரம், குற்றத்தைவிட மிகக் கொடூரமாக உள்ளது.

நிரபராதியைத் தண்டிப்பது என்பது தவறான நீதி பரிபாலனம். ஆனால், குற்றவாளியைத் தண்டிக்காமல் விட்டுவிடுவது நீதியே இல்லாதது போன்ற மோசமான தவறாகிவிடும்.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் தங்களின் குழந்தைப் பருவத்தில் மட்டுமல்லாமல் திருமண வாழ்க்கையிலும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக,

“இந்த வழக்கைப் பொறுத்தவரை குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. தஷ்வந்த்தின் குற்றத்துக்குத் தூக்குத் தண்டனையைவிட வேறு எந்தத் தண்டனையும் ஈடாக இருக்காது. இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்குதான். ஆகவே மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டும் எனப் பல தரப்பிலும் வலியுறுத்தப்படும் நிலையில் சமூக நலனை மனதில்கொண்டு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதே சரியானதாக இருக்கும். தூக்குக் கயிற்றில் அவரது கடைசி நொடியானது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரின் காமத்திற்கான கடைசி நொடியாக இருக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் விரும்புகிறது” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon