மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

ஊடகங்களிடம் பிடி கொடுக்காத முதல்வர்!

ஊடகங்களிடம் பிடி கொடுக்காத முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் நேற்று (ஜூலை 10) தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

தமிழக அரசுக்கு எதிராகச் செய்திகள் வெளியிடும் தொலைக்காட்சிகளுக்கு மிரட்டல் விடப்படுவதை ஒட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகக் கடந்த ஜூன் 25ஆம் தேதியே மின்னம்பலத்தில், தமிழக அரசுக்கு எதிராக சேனல் அதிபர்கள் ரகசிய கூட்டம்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதன்படி தமிழக அரசின் போக்கை எதிர்த்து சென்னை காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியில் ஜூலை 1ஆம் தேதி ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ‘ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி’ என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் ஒருங்கிணைப்பாளராகப் பத்திரிகையாளர் பீர் முகமது தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் ஊடகங்களுக்கான பிரச்சினைகள் தொடர்பாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அச்சு, காட்சி, டிஜிட்டல் ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டாகச் சென்று சந்திப்பது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்பதையும் அடக்குமுறை: முதல்வரைச் சந்திக்கும் ஊடகக் கூட்டணி! என்று ஏற்கெனவே நாம் பதிவு செய்திருந்தோம்.

இந்த நிலையில்தான் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி சார்பில் சந்தித்து தங்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்வரோடு சுமார் அரைமணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது. சந்திப்பு ஆரம்பித்ததும் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டதும் வரவேற்ற முதல்வர் சில டிவி பிரபலங்களைப் பார்த்து, ‘நானும் உங்க நிகழ்ச்சிகளை பாக்குறேனே... நீங்கள்லாம் அரசாங்கத்துக்கும் சப்போர்ட் பண்ணணும். ஆனா, சப்போர்ட்டே பண்ண மாட்டேங்குறீங்களே?’ என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறார்.

ஆனால் பத்திரிகையாளர்கள் தரப்பில், “ஆதரிக்க வேண்டிய மக்கள் நலத்துக்கான விஷயங்களை ஆதரிச்சுக்கிட்டுதான் இருக்கோம். உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறோம். அரசாங்கத்தை விமர்சிக்கிற சேனல்கள் அரசு கேபிள்ல சரியா தெரியறதே இல்லை அரசை விமர்சிக்கிற சேனல்களை அரசு கேபிள்ல பின்னாடி தள்ளிப் போட்டுடுறாங்க...” என்றதும்,

“நான் பாக்குறேனே எல்லா டிவியும் அரசு கேபிள்ல வருதே?’’ என்று பதில் கொடுத்திருக்கிறார் முதல்வர்.

“பல மாவட்டங்கள்ல உள் பகுதிகள்ள, கிராமங்கள்ல அரசு கேபிள்ல சில குறிப்பிட்ட சேனல்கள் தெரியறதில்லை சார். உங்களுக்குக் கீழ வேலை பாக்குறவங்கதான் இதை பண்றாங்க. இதை நீங்க கவனிச்சு நடவடிக்கை எடுக்கணும்’’ என்று கோரியுள்ளனர். குறிப்பாக புதிய தலைமுறையின் அரசு கேபிள் அலைவரிசைகள் எப்படி பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை கார்த்திகை செல்வன் எடுத்துக் கூறியுள்ளார்.

“கட்டாயமா நான் உடனே என்னன்னு விசாரிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார் முதல்வர்.

கலைஞர் டிவியின் துணைத் தலைவர் ஃபெரைராவிடம் பேசிய முதல்வர், “நான் எல்லா டிவியும் பாத்துட்டுதான் வர்றேன். கலைஞர் டிவியும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன். எப்போதுமே எங்களைத் தாக்குறீங்களே?’’ என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர், “சார் எந்த மீடியாவும் ஒட்டுமொத்தமா அரசை விமர்சிக்கிறதில்ல. முழுமையான பொறுப்பான எதிர்க்கட்சியா செயல்படுறோம். அரசுடைய எல்லா திட்டங்களையும் மக்கள்கிட்ட கொண்டு போறோம். திட்டங்கள்ல குறைகள் இருக்கும்போது அதையும் எடுத்துச் சொல்றோம்” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

இப்போது தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள், நிலுவையில் இருக்கும் வழக்குகள் பற்றியெல்லாம் விவரங்களோடு முதல்வருக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் ஊடகக் கூட்டணியினர். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட முதல்வர், “நீங்க எங்களோட இருங்க. நாங்க உங்களோட இருப்போம்’’ என்று சொல்லி வழியனுப்பி வைத்திருக்கிறார்.

முதல்வரிடம் இருந்து எந்த காத்திரமான வாக்குறுதியும் கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள்.

ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பீர் முகமது, தி இந்து தலைவர் என்.முரளி, தி இந்து பதிப்பாளர் என்.ரவி, டைம்ஸ் ஆஃப் இந்தியா மெட்ரோ ஆசிரியர் சுப்பிரமணி, புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகை செல்வன், கலைஞர் டிவி துணைத் தலைவர் ஹுமாயுன் ஃபெரைரா, மக்கள் டிவி நிர்வாக ஆசிரியர் சி.ஆர்.பாஸ்கரன், பெண் ஊடகவியலாளர்கள் அமைப்பின் நிர்வாகியான மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் உள்ளிட்டோர் முதல்வரைச் சந்தித்த பத்திரிகையாளர்களில் இடம்பெற்றிருந்தனர்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon