மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

அன்புமணியோடு விவாதிக்கத் தயார்!

அன்புமணியோடு விவாதிக்கத் தயார்!

சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் உடன் விவாதிக்கத் தயார் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்ற விஜய் புகைபிடிக்கும் காட்சி சர்ச்சையைக் கிளப்பி அந்த விவகாரம் உயர் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. போஸ்டர் வெளியான சற்று நேரத்திலேயே பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் எதிர்க்கப் படக்குழு சர்ச்சைக்குரிய போஸ்டரைச் சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து நீக்கியது.

நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது. வெங்கட் பிரபு இயக்கும் அந்தப் படத்துக்கு மாநாடு எனப் பெயரிடப்பட்டுள்ளது. நேற்று இது தொடர்பாக வீடியோ ஒன்றை சிம்பு வெளியிட்டுள்ளார். அதில், “மாநாடு படம், அரசியல் கருத்துகளை உள்ளடக்கிய படம்தான். அதற்காக நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறவில்லை. இந்த நேரத்தில் படத்தில் பேச வேண்டிய விஷயங்களைப் பயப்படாமல் பேச வேண்டும்; அதை நான் செய்வேன்” என்று படம் பற்றி கூறியுள்ளார்.

அடுத்ததாக சர்கார் படம் பற்றி பேசிய அவர், “பாபா படம் வந்தபோதும் இதே பிரச்சினை நடந்தது. தொடர்ச்சியாக சினிமா துறையைக் குற்றம் கூறுகின்றனர். இது தொடர்பாக நான் விவாதிக்கத் தயார். எப்போது எங்கே பேச வேண்டும் என்றாலும் பரவாயில்லை. மக்கள் அதை லைவ்வாகப் பார்க்க வேண்டும். சினிமா துறை சார்பாக நாங்கள் தயாராக உள்ளோம். அன்புமணி அங்கிள் எப்போது என்று கூறினால் நான் பேச தயாராக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரும் ‘இன்றைய காதல் டா’ என்ற தனது புதிய படத்தை அறிவித்து நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சினிமாவைப் பார்த்துத்தான் கெட்டுப் போகிறார்களா, சினிமாவே இல்லாத காலகட்டத்தில் கண்ணகியை விட்டு கோவலன் எப்படி மாதவியை தேடிப் போனான். சமுதாயத்தில் இருப்பவற்றைத்தான் சினிமா பிரதிபலிக்கிறது. புகைபிடிக்கக் கூடாது என்பது நல்லது. அது என்ன விஜய் சிகரெட் பிடித்தால் மட்டும் டார்கெட் செய்கிறீர்கள். தமிழன் என்பதாலா? கஞ்சா நாட்டில் எப்படி தடை செய்யப்பட்டிருக்கிறதோ? அதே போல் புகையிலை, சிகரெட்டைத் தடை செய்ய வேண்டும். இவை எல்லாம் தடை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டேதான் இருக்கிறீர்கள், அவன் மென்று கொண்டேதான் இருக்கிறான். பொது இடத்தில் விஜய் தம் அடிக்கிறார் என்றால் அங்கு நான் தட்டி கேட்பேன். ராமதாஸ் ஐயாவும், அன்புமணி ராமதாஸும் எனக்கு நண்பர்கள். ஏன் எல்லோரும் சினிமாகாரர்களை மட்டுமே டார்கெட் செய்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon