மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

நீண்ட தூரப் பேருந்துகளில் தத்கால் டிக்கெட்!

நீண்ட தூரப் பேருந்துகளில் தத்கால் டிக்கெட்!

ரயில்களில் தத்கால் டிக்கெட் முன்பதிவு செய்வதுபோல், அரசு விரைவு பேருந்துகளில் தத்கால் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 20 ஆயிரம் பேருந்துகள் உள்ளன. இதில் சுமார் 1,100 பேருந்துகள் நீண்ட தூரத்துக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளாகும்.

தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியது. இதன் காரணமாக அரசு பேருந்துகளின் வருவாய் குறைந்தது. இதனால், வருவாயை அதிகரிக்கும் வகையில், போக்குவரத்து கழகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஐந்து மாதங்களுக்கு முன்பு உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு ஆய்வு செய்து சில பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளது.

அதன்படி, நீண்ட தூரப் பேருந்துகளில் தத்கால் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்வதைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக, பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் இந்த முறையைப் பயன்படுத்துவது குறித்துப் பரீசிலிக்கப்படும். தற்போது திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை நீண்ட தூரப் பேருந்துகள் 85 சதவிகிதம் பயணிகளுடன் இயக்கப்படுகின்றன. வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இந்த நிலையில் தத்கால் முறையை அமல் செய்தால் அரசு போக்குவரத்து கழகங்களுக்குக் கூடுதல் வருவாயைப் பெற முடியும் என்று கருதப்படுகிறது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அரசு நீண்ட தூர எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் படுக்கை வசதி இருக்கிறது. இதில் ஒவ்வொரு பேருந்துகளிலும் தலா நான்கு படுக்கைகளைத் தத்கால் முறையில் ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், 15 முதல் 20 சதவிகிதம் கூடுதல் வருவாய் கிடைக்கும் எனப் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon