மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

புதுச்சேரியிலும் லோக் ஆயுக்தா!

புதுச்சேரியிலும்  லோக் ஆயுக்தா!

புதுச்சேரியில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி உறுதியளித்துள்ளார்.

புதுச்சேரி சட்டமன்றத்தில் நேற்று (ஜூலை 10) நேரமில்லா நேரத்தில் பேசிய அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் அன்பழகன், “நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் இருக்கும்போது கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தை புதுவையில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு இதுவரை கொண்டுவராதது துரதிர்ஷ்டவசமாக உள்ளது. நேற்று தமிழகத்திலும் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பின்பற்றி புதுவையிலும் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் லோக் ஆயுக்தா சட்டத்தை மத்திய அரசின் அனுமதி பெற்றுதான் நிறைவேற்ற வேண்டும். ஏற்கெனவே யூனியன் பிரதேசமான டெல்லியில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுபோலவே புதுவையிலும் மசோதாவை கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

லோக் ஆயுக்தா அமைக்காத மாநிலங்கள் குறித்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம், லோக் ஆயுக்தா மசோதாவை நிறைவேற்றாத தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் உடனடியாக லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜூலை 10ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் மாநிலங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று தமிழகத்தில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த வழக்கில் புதுச்சேரி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “லோக் ஆயுக்தா வரைவு மசோதா தயாராகி வருகிறது. மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon