மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

சிறப்புக் கட்டுரை: நம் குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

சிறப்புக் கட்டுரை: நம் குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

சல்மா

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருப்பது நிம்மதியைத் தருகிறது.

மீட்புக் குழுவினர் தங்களது உயிரைப் பணயம் வைத்து இந்த சாகசத்தைச் செய்திருக்கிறார்கள் .14 குழந்தைகளின் உயிரைக் காக்கப் பல நாட்களாக உன்னதமான கடும் போராட்டம் நடந்தது. குழந்தைகளைக் காக்க உலகம் தவித்தபடி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தது.

மீட்பு நடவடிக்கைகளைக் காட்டும் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது சில விஷயங்கள் நினைவுக்கு வந்தன. நம் நாட்டில் 2016ஆம் ஆண்டில் ஒரு வருடத்திற்கு 55,000 குழந்தைகள் சத்தமே இல்லாமல் காணாமல் போயிருப்பதாகவும் சென்ற ஆண்டைவிட இது 30 சதவிகிதம் அதிகம் எனவும் மத்திய உள் துறை அமைச்சகம் இரு தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டது.

இந்தச் செய்தியை வெறுமனே செய்தியாகக் கடந்து செல்ல என்னால் இயலவில்லை. உணர்வுகள் தூண்டப்பட்டுக் கடும் சித்ரவதைக்கு உள்ளாகிற்று என்றுதான் சொல்ல வேண்டும்.

​அவ்வப்போது குழந்தைகள் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்படுகிற செய்திகளை ஊடகங்களில் காண நேரும்போது நாம் கடுமையான கோபத்தையும் எதிர்ப்பையும் சமூக வலைதளங்களில் பதிவுசெய்வதும், பிறகு அச்செய்தியிலிருந்து விலகி, கடந்து செல்வதும் வழக்கமான விஷயம். அப்படித்தான் சிறுமி ஹாசினியின் கொலைக்கு நாம் எதிர்வினையாற்றினோம் (காஷ்மீர் சிறுமியை இங்கே நாம் சேர்க்க வேண்டாம். அது அரசியல் ரீதியில் நிகழ்த்தப்பட்ட கொடும் நிகழ்வு).

உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள குழந்தைக் கடத்தல் செய்தி தரும் மன உளைச்சல், அதிர்வு மிக அதீதமானது. ஒரு குழந்தை கடத்தப்படும்போது அடுத்து அக்குழந்தைக்கு என்ன நடக்கும் என்பதை ஊகிக்கவியலாத அளவுக்கு நாம் யாரும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் எங்கே கொண்டு செல்லப்பட்டார்கள், எப்படிச் சிதைக்கப்பட்டிருப்பார்கள் என்பதையெல்லாம் யோசிக்கும்போதே எழுகிற துக்கம் தொண்டையை அடைக்கிறது.

அவர்கள் எங்கே சென்றிருப்பார்கள்? அவர்கள் என்ன ஆனார்கள்? யாருக்காவது தெரியுமா? அரசுக்கும் காவல் துறைக்கும் இதைக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு இல்லையா?

2016ஆம் ஆண்டில் மட்டுமே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 1,06,958 புகார்கள் பதிவாகியிருப்பதையும் (பதிவாகாதவை எத்தனையோ) இங்கே கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தோமென்றால் பிரச்சினை எத்தனை அபாயகரமானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

நம் நாட்டில் குழந்தைகள் உரிமைகள் மோசமான அளவுக்கு மீறப்படுகிறது என்பதற்கு இச்செய்தி சாட்சியாக இருக்கிறது. ஒரு சமூகத்தில் அதிகமும் பாதுகாக்கப்பட வேண்டிய இரண்டு தரப்பினர் பெண்களும் குழந்தைகளும்தான். அண்மையில் வெளியான சர்வதேச ஆய்வு ஒன்று, பெண்கள் அபாயத்தில் உள்ள நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம் என்கிறது. இந்தச் சமயத்தில்தான் ஆளும் அரசு ‘பேட்டி பச்சாவ்’ (பெண் குழந்தையைக் காப்போம்) என உளறிக்கொண்டிருக்கின்றன. துரதிர்ஷ்டமான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்கிற அச்சத்தை இச்செய்திகள் நமக்கு உண்டாக்குகின்றன.

பாலியல் தொழிலுக்கும் உறுப்புத் திருட்டுக்கும் அடிமைத் தொழிலுக்கும் உட்படுத்தப்படுகிற நோக்கத்தில் கடத்தப்படுகிற குழந்தைகளைப் பறிகொடுத்த தாய்மார்களில் ஒருத்தியாக நான் அந்தக் குழந்தைகளை நினைத்துக்கொள்கிறேன். அவர்கள் நிச்சயமாகக் கொடும் வாழ்க்கை முறைக்குள் சிக்கவைக்கப்பட்டிருப்பார்கள் என்கிற துயரத்தை மறந்துவிட்டு வாழ்வது எந்த ஒரு தாய்க்கும் இயலாத காரியம் என்பதை இந்த அறிக்கை விடுகிற அரசுகள் உணர்ந்துகொள்ள முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்?

அவர்களைக் கண்டுபிடிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? இந்தக் குற்றங்களும் குற்றவாளிகளும் பெரும்பாலும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட நெட்வொர்க்கில் உள்ளவர்கள்தானே? இந்த நெட்வொர்க்குகள் பற்றி அரசின் உளவு அமைப்புகளுக்குத் தெரியாதா? குழந்தைகள் கடத்தப்படுவது புதிதாகவா நடக்கிறது? இத்தகைய கடத்தல்கள், உறுப்பு திருட்டுகள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுதல் ஆகியவை குறித்த போதிய தகவல்கள் நம் உளவுத் துறை அமைப்புகளிடம் ஏன் இல்லை? குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, குழந்தைகளை மீட்க முடியாத இயலாமைக்கு யாரெல்லாம் பொறுப்பு?

ஓராயிரம் கேள்விகள் எழுந்தாலும் இந்தக் கேள்விகளை நாம் சூன்ய வெளிக்குத்தான் அனுப்ப வேண்டும். அரசின் காதுகளில் இவற்றை உரக்க எழுப்பினாலும் பதில் ஏதும் கிடைக்கப் போவதில்லை.

குழந்தைகளுடைய உயிரின் மதிப்பை நாம் எப்போது பிற நாடுகளைப் போலப் புரிந்துகொள்ளப் போகிறோம் என்கிற விரக்தி மனதைச் சூழ்கிறது. தாய்லாந்தில் காப்பாற்றப்பட்ட குழந்தைகளை எண்ணி மனநிறைவு கொள்ளும்போதே இத்தகைய அக்கறையும் தீவிரமான முயற்சியும் உலகெங்கிலும் உள்ள அனைத்துக் குழந்தைகள் விஷயத்திலும் காட்டப்பட வேண்டுமே என்னும் ஏக்கமும் உண்டாகிறது.

உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை, உயிரை, உரிமைகளை, நலன்களை இனி இப்படித்தான் பாதுகாக்க வேண்டும் என்கிற ஒரு பிரகடனத்தை இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் எழுப்பட்டும்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சல்மா கவிஞர், நாவலாசிரியர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon