மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

ஊக்க மருந்து சர்ச்சை: உறுதி செய்த பிசிபி!

ஊக்க மருந்து சர்ச்சை: உறுதி செய்த பிசிபி!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அஹமத் சேஷாத் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் ஐந்து உள்ளூர் அணிகள் பங்கேற்ற 'பாகிஸ்தான் கோப்பை' தொடர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இந்தத் தொடரில் கைபர் பக்துன்குவா அணிக்காக விளையாடிய அஹமத் சேஷாத் 3 அரைசதம் மற்றும் ஒரு சதத்துடன்; 74.4 சராசரியுடன் 372 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரின்போது வீரர்களுக்கு டோப் டெஸ்ட் எனப்படும் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அந்தச் சோதனையில் ஒவ்வொரு வீரருக்கும் 'ஏ சாம்பிள்', 'பி சாம்பிள்' என இரு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. அதில் அஹமத் சேஷாத்தின் ஏ சாம்பிளை சோதனை செய்து பார்த்ததில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது.

இதுநாள் வரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரது பெயரை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தது. தற்போது டோப்பிங் ஏஜென்சியிடமிருந்து கிடைத்த ஒப்புதலின்படி அஹமத் சேஷாத் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அதற்கு அவர் 14 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் பிசிபி உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த நோட்டீஸை அடுத்து அஹமத் சேஷாத் சர்வதேச போட்டிகள், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜிம்பாப்வே முத்தரப்பு தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அவர் கழட்டி விடப்பட்டிருந்தார்.

தற்போது அஹமத் சேஷாத், சோதனையின் 'பி சாம்பிள்' ரத்த மாதிரியைச் சோதனை செய்ய மனு ஒன்றை அளித்திருக்கிறார். ஒருவேளை அந்தச் சோதனை முடிவு பாஸிட்டிவாக இல்லை என்றால் அவர் மீதான தடை விலக்கப்பட வாய்ப்புள்ளது.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon