மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை!

அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை!

அரியலூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் ஜூலை 15ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் மு. விஜயலெட்சுமி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: 'தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் கப், தண்ணீர் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி, தடைசெய்யப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஜூலை 15ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு மாறாகத் துணிப்பை, சில்வர் டம்ளர், இலை போன்றவற்றை பயன்படுத்தி பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். இதற்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon