மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

தாமதமாகும் ரயில்வே திட்டங்கள்!

தாமதமாகும் ரயில்வே திட்டங்கள்!

நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்டுள்ள தாமதத்தால்தான் ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் முடங்கியிருப்பதாக ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த வாரத்தில் ரயில்வே வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இந்திய ரயில்வே துறை சார்பில் நிலம் கையகப்படுத்துதல் பணிகளுக்காக 1997-98 முதல் பல்வேறு மாநிலங்களுக்கு ரூ.8,000 கோடி மதிப்பிலான தொகை வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. பல்வேறு இடங்களில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இதில் தெற்கு ரயில்வே தமிழ்நாட்டுக்கு ரூ.200 கோடி வழங்கியுள்ளது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் வேளச்சேரி முதல் செயின்ட் தாமஸ் மவுன்ட் வரை அறிவிக்கப்பட்ட திட்டமும் ஒன்றாகும். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் 2008ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கின்றன.

இதுகுறித்து ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "அனைத்து ரயில்வே மண்டலங்களின் நிதித் துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே வாரியத்தின் நிதித் துறை ஆணையர் கலந்துகொண்ட கூட்டம் ஜூன் 28ஆம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில்தான் நிலம் கையகப்படுத்துதலில் நிலவும் தாமதங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. இனிமேல் நிலம் கையகப்படுத்தப்பட்டு ரயில்வே துறைக்கு அளிக்கும் வரை மாநிலங்களுக்கு பணத்தை அளிக்க வேண்டாம் எனவும் நிதி ஆணையர் இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தினர்" என்று கூறியுள்ளார்.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சென்னை கடற்கரை மற்றும் அத்திப்பட்டு, மதுரை முதல் அருப்புக்கோட்டை வரையிலான ரயில் திட்டம், திண்டிவனம் முதல் நாகரி வரையிலான திட்டம் ஆகியவற்றுக்கும் நிலம் கையகப்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது' என்று தெரிவித்துள்ளது.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon