மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

பவர் ஸ்டார் மீது மேலும் ஒரு வழக்கு!

பவர் ஸ்டார் மீது மேலும் ஒரு வழக்கு!

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனக்கென, முன்னணி நடிகர்கள் போல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் பவர் ஸ்டார் எனும் புனைப்பெயரில் அறியப்படும் சீனிவாசன். 2013ஆம் ஆண்டு நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடித்தார். இதற்கு முன்னர் லத்திகா எனும் தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்து நடித்திருந்தார்.

நடிகராக மட்டுமில்லாமல் சென்னையில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிக் கொடுக்கும் ஏஜென்ட் தொழிலும் செய்து வருகிறார். 2013ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கு ரூ.1000 கோடி கடன் பெற்று தருவதாகக் கூறி, ரூ.10 கோடி மோசடி செய்ததாக சீனிவாசன் மீது புகார் எழுந்தது. இதனடிப்படையில், டெல்லி போலீஸார் சீனிவாசனைக் கைது செய்தனர்.

ஜாமீனில் வெளியே வந்த சீனிவாசன் மீது பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மசூர் அலாம் மற்றும் அவரது சகோதரர் சஜ்ஜாத் வஹாப் பெங்களூரு போலீஸாரிடம் பண மோசடி புகார் ஒன்றை அளித்தனர். அதில், 'ரூ.30 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி அதற்கு ரூ.1 கோடியை சீனிவாசன் முன்னதாகவே வாங்கினார். ஆனால், சீனிவாசன் இதுவரை கடன் பெற்றுத் தரவில்லை. கமிஷனாகப் பெற்ற ரூ.1 கோடியையும் திருப்பித் தரவில்லை' எனக் குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து சென்னை வந்த பெங்களூரு போலீஸார் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்து, பெங்களூரு அழைத்துச் சென்றனர். பின் பிணையில் வந்து பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இது போன்று பலமுறை பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள பவர் ஸ்டார் சீனிவாசன் தற்போது புதிய மோசடி ஒன்றிலும் சிக்கியிருக்கிறார். புது வண்ணாரப்பேட்டை அன்னை இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் தயாநிதி. இவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “சினிமா வாய்ப்பு தேடி அலைந்தபோது, நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் தொடர்பு ஏற்பட்டது. சினிமா ஆசையில் இருந்த எனக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக உறுதி அளித்தார். அதற்காக ரூ.4.16 லட்சத்தை பெற்றுக் கொண்டார். ஆனால், இன்று வரை வாய்ப்பு வாங்கி தரவில்லை. தொடர்பு கொள்ள முயற்சித்தாலோ, நேரில் பார்க்க சென்றாலோ முடியவில்லை. என்னிடம் அவர் மோசடி செய்தது இதன்மூலம் தெரியவந்துள்ளது. எனவே போலீஸார் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக விசாரித்துவரும் புது வண்ணாரப்பேட்டை போலீஸார் நேற்று (ஜூலை 10) பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon