மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

வாழவைக்கும் காற்றை அழிக்கும் மனிதர்கள்!

ஹாய் குட்டீஸ்… காற்று எனும் பேருயிரைப் பத்திதான் இப்போ பாத்திட்டிருக்கோம். காற்று எனும் இந்தப் பேருயிர்தான் நிலம், நீர் ஆகியவற்றை இயக்கும் ஆற்றல்கொண்டது. ஆனா, இயற்கையின் ஒரு விநோதம் என்ன தெரியுமா?

இந்தப் பூமியில் வாழும் கண்ணுக்குத் தெரியாத சிற்றுயிர் முதல் மிகப்பெரிய விலங்கினங்கள் வரைக்கும் எல்லாம் உயிருடன் இருக்கணும்னா காற்று, நீர், நிலம் ஆகிய மூன்றும் வேணும். இவற்றுள் ஏதோ ஒண்ணு இல்லைனாகூட எந்த உயிராலும் வாழ முடியாது!

இப்போ காற்று எனும் பேருயிரை நாம எப்படி எல்லாம் அழிக்கிறோம்னு பாப்போமா?

* நாம பயன்படுத்துற அனைத்துவிதமான படிம எரிவாயுக்களும் (Fossil fuels) காற்றின் தன்மையை பாதிக்கக்கூடியவை.

* இவற்றைப் பயன்படுத்திதான் வாகனங்கள் பெருமளவில் இயங்கிவருகின்றன. இவை வெளியிடும் கரிம காற்று காற்றில் உயிர்த்தன்மையைக் குறைக்கிறது.

* நாம் ஏற்கனவே பார்த்ததுபோல காற்றில் எண்ணிலடங்கா நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இவை காற்றிலுள்ள உயிர்க்காற்றை நம்பியுள்ளன. நம் செயல்பாடுகளால் காற்றில் உயிர் வாயுவின் அளவு குறைந்து கரிம வாயு அதிகமாகிறது. அதனால் இந்த நுண்ணுயிரிக் கூட்டம் அழிக்கப்படுகிறது.

* வாகனங்களைத் தவிர குளிரூட்டிகள் (Air conditioner), குளிர்பதனப் பெட்டிகள் (Fridge) ஆகியவை வெளியிடும் இரண்டாம் நிலை கரிமக் காற்று (Chloro-fluro carbons) இன்னும் ஆபத்தானவை. அவை கரிமக் காற்றின் அளவைக் கூட்டுவதோடு மட்டுமல்லாமல் வெப்பத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

* சூரிய ஒளிக்கதிர்களை உள்வாங்கித் திருப்பி அனுப்புவதற்குப் பதிலாக, தன்னகத்தே சேமித்து வைத்துக்கொள்ளும். இதனால் காற்றிலும் சூழலிலும் வெப்பம் அதிகரித்து, காற்றிலுள்ள ஈரப்பதம் அழிக்கப்படும்.

* இத்தகைய சூழலில் காற்றில் இயற்கையாக இருக்கும் நுண்ணுயிரிக் கூட்டம் இறந்துவிடும்.

பிறகு எப்படிப்பட்ட உயிர்கள் காற்றில் உருவாக்கப்படும் தெரியுமா?

- நரேஷ்

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon