மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

பார்களில் தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா?

பார்களில் தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா?

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் மது அருந்துபவர்களுக்குத் தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் கடையை மூடக்கோரி நாம் தமிழர் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு நிலுவையில் உள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் உள்ள பார்களில் உணவு பாதுகாப்பு சட்டம் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுப்பியிருந்தார்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன என்ற விவரத்தையும் கேட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் நேற்று (ஜூலை 10) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தமிழகத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாத டாஸ்மாக் பார்கள் ஏழு நாட்களில் மூடப்படும் என்று உறுதியளித்தார்.

இதையடுத்து, நீதிபதி கிருபாகரன் குடிமகன்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை விட அவருடைய பாதுகாப்பு முக்கியம் என்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு தரமான உணவுப் பொருட்கள் குடிமகன்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், டாஸ்மாக் கடைகளில் இரண்டு மணிக்கு ஏன் திறக்கக் கூடாது என்ற கேள்வியை எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர் அது அரசின் கொள்கை முடிவு என்று குறிப்பிட்டார் . இதில் என்ன கொள்கை முடிவு என்று கேட்ட நீதிபதி இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளார்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon