மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி மீது வெங்கய்யாவிடம் புகார்!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி மீது வெங்கய்யாவிடம் புகார்!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாராக இருந்தது.

"அதிமுகவில் செய்தித் தொடர்பாளர்கள் யாரும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேச வேண்டாம் என தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது ஆஃப் த ரெக்கார்டாக உத்தரவிட்டிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் டிவியில் தலைகாட்டாமல் இருந்தனர். அடுத்து சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை பிரச்சினை வந்தது. எட்டு வழிச் சாலை தொடர்பாகவும் யாரும் பேச வேண்டாம் எனச் செய்தித் தொடர்பாளர்களுக்கு சொல்லப்பட்டது. ஆனால் அதையும் மீறி சிலர் டிவியில் முகம் காட்ட, துணை முதல்வர் டென்ஷன் ஆனார். 'அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் தவிர வேறு யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தார்.

அதிமுகவில் நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் அன்பழகன். இவர்தான் டிவியில் தொடர்ந்து பேசியவர்களில் முக்கியமானவர். சில தினங்களுக்கு முன்பு எட்டு வழிச் சாலை அமைய இருக்கும் பகுதியிலேயே நடந்த ஒரு விவாத நிகழ்ச்சியில் அன்பழகன் பங்கேற்றார். அன்பழகனை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என எடப்பாடியை சந்தித்து பேசியிருக்கிறார் பன்னீர்.

அன்பழகனோ எடப்பாடி ஆதரவாளர். அதனால் எடப்பாடி, ' கட்சியை விட்டு எல்லாம் எடுக்க வேண்டாம். அவரு பேசியதை நானும் பார்த்தேன். அதுல தப்பு எதுவும் இல்ல. அனுமதி வாங்காமல் போனதுக்கு கூப்பிட்டு கண்டிப்போம்' எனச் சொல்லிவிட்டாராம். நேற்று இரவு நாஞ்சில் அன்பழகனை வீட்டுக்கு வரச் சொல்லி பேசியிருக்கிறார் எடப்பாடி.

'நீங்க பேசியதை நான் பார்த்தேன். நல்லாதான் பேசினீங்க. ஆனால், உங்களை செய்தித் தொடர்பாளர் பட்டியலில் சேர்க்கவில்லை. அதனால் நீங்க போறதுக்கு முன்பு அனுமதி வாங்கிட்டு போங்க. இப்போ இருக்கும் செய்தித் தொடர்பாளர்களில் பொன்னையன், வைகைச்செல்வன், கோகுல இந்திரா, வளர்மதி, மருது அழகுராஜ் எல்லாம் பேருக்காகவும் கௌரவத்துக்காகவும்தான் அந்த பொறுப்பில் இருக்காங்க. அதனால் உடனடியாக ஒரு புது லிஸ்ட் ரெடி பண்ணச் சொல்லியிருக்கேன். அந்த லிஸ்ட்ல உங்க எல்லோரையும் போட சொல்லிடுறேன். அதுவரை எங்கேயும் எதுவும் பேச வேண்டாம். குறிப்பாக எட்டு வழிச் சாலை தொடர்பாக எதுவும் வாயே திறக்காதீங்க.

உங்க மேல பன்னீர் கோபத்தில் இருக்காரு. அது உங்க மேல இருக்கும் கோபம் இல்ல. என் மேல இருக்கும் கோபம். என்னோடு இருப்பவர்களை விரட்டணும்னு பார்க்கிறாரு. அதுக்கு நாம இடம் கொடுக்காமல் நடந்துக்கணும்.' என்று அட்வைஸ் செய்து அனுப்பியிருக்கிறார்." என்று முடிந்தது ஸ்டேட்ஸ்.

அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப், " அப்போ விரைவில் புதிய நிர்வாகிகள் பட்டியல் வரப் போகுது. பன்னீருக்கும் எடப்பாடிக்கும் இடையே பனிப்போர் தொடருது. அப்படித்தானே?" என கமெண்ட்டில் போட்டது. அதற்கு பதிலை ரிப்ளைஸில் போட்டது ஃபேஸ்புக்.

"நிஜம்தான்! பன்னீரைப் பொறுத்தவரை தமிழகம் முழுக்க எல்லா மாவட்டங்களிலும் உள்ள முக்கிய நிர்வாகிகள் அவரது ஆதரவாளராக இருக்க வேண்டும் என நினைக்கிறார். அப்போது தான் எதிர்காலத்தில் கட்சியில் ஏதாவது பிரச்னை என்றாலும் எல்லோரும் தன் பக்கம் வருவார்கள் என்பது அவர் கணக்கு. கொங்கு மண்டலம் எடப்பாடி கட்டுப்பாட்டில் இருப்பது போலத் தென் மாவட்டங்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைக்கிறார்.

ஆனால் எடப்பாடியோ தென் மாவட்டங்களும் தான் சொல்வதை கேட்க வேண்டும் என நினைக்கிறார். அதனால்தான் தென் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை வளைப்பதற்கான வேலையை சத்தமில்லாமல் பார்க்கிறார். பன்னீர் எதிர்ப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பொறுப்பு வழங்குவதும், அடிக்கடி அழைத்து பேசுவதுமாக இருக்கிறார் எடப்பாடி.

எடப்பாடியின் இந்த கேம்களுக்கு சளைக்காமல் ஓ.பன்னீர் தரப்பு இன்னொரு வேலையை கனகச்சிதமாக செய்து முடித்திருக்கிறது. ஜெயலலிதா இறந்த கால கட்டத்தில் தமிழகத்தின் குறிப்பாக அதிமுகவின் அரசியல் நிலவரங்களை கவனிக்கும் பொறுப்பை அப்போது மத்திய அமைச்சராக இருந்த வெங்கய்யா நாயுடுவிடம் கொடுத்திருந்தார் மோடி. அதனால் அதிமுகவுக்குள் நல்ல தொடர்போடு இருந்தார் வெங்கையா. அவர் துணை ஜனாதிபதி ஆன நிலையிலும் தமிழகத்திலுள்ள அதிமுகவினர் வெங்கய்யாவை பழைய பாசத்துடனே அணுகி வருகின்றனர்.

கடந்த வாரம் சென்னை வந்திருந்தார் வெங்கய்யா . அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீரின் மகனான ரவீந்திரநாத் வெங்கய்யாவை முன்கூட்டியே அப்பாயின்ட்மென்ட் வாங்கி சந்தித்தார். தான் தனிப்பட்ட முறையில் வெங்கய்யாவை சந்தித்தால் விஷயம் பெரிதாக வெடிக்கும் என்பதால்தான் தன் மகனை அனுப்பி வைத்தாராம் ஓ.பன்னீர். வெங்கய்யாவை சந்தித்த ஓ.பன்னீரின் மகன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான புகார்களை வாசித்தாராம். ’எங்களை எடப்பாடி மதிப்பதே இல்லை, கட்சியை அவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்ல பல முயற்சிகளை எடுக்கிறார், நீங்களெல்லாம் அன்று சொன்னதால்தான் எங்க அப்பா அணிகளை இணைத்தார். ஆனால் இப்போது எங்க அப்பாவுக்கு மரியாதையே இல்லை’ என்று ஓ.பி.ரவீந்திரநாத் சொன்ன புகார்களை எல்லாம் கேட்டுக்கொண்டு அவரை அனுப்பி வைத்தாராம் வெங்கய்யா” என்ற பதிலைப் போட்டுவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

புதன், 11 ஜூலை 2018

அடுத்ததுchevronRight icon