மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

தாய்லாந்து: பயிற்சியாளரைக் கொண்டாடும் மக்கள்!

தாய்லாந்து: பயிற்சியாளரைக் கொண்டாடும் மக்கள்!

தாம் லுவாங் குகைக்குள் மூ பா கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள் மாட்டிக்கொண்ட தகவல் வெளியானபோது, அவர்களை அங்கு அழைத்துச் சென்ற பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங்கைக் குறை கூறினர் தாய்லாந்து மக்கள். பதினெட்டு நாட்கள் கழித்து அவர்கள் அனைவரையும் மீட்ட பிறகு, அதே சாண்டவாங்கை நாயகனாகக் கொண்டாடுகின்றனர். இடைப்பட்ட நாட்களில் சிறுவர்கள் உயிர் பிழைத்திருக்கும் விதமாக எக்கபோல் சாண்டவாங் மேற்கொண்ட நடவடிக்கைகளே இதற்குக் காரணம்.

தாய்லாந்து சியாய் ராய் மாகாணத்திலுள்ள மா சே பகுதியானது, அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களுக்குப் புகலிடம் அளிக்கும் நிலமாகும். மியான்மர், சீனா, லாவோஸ் பகுதிகளின் எல்லைப்பகுதி அருகிலிருப்பதால், அங்கிருந்து வரும் மக்கள் தாய்லாந்தில் தஞ்சம் புக இந்தப் பகுதியே வழிவகுக்கிறது. தாம் லுவாங் குகைக்குள் சிக்கிய மூ பா அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களில் துல், மார்க் மற்றும் டீ என்ற மூன்று பேரும், அதன் பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங்கும் அப்படி அகதிகளாக வந்தவர்கள் தான். இது உண்மை என்று கூறியுள்ளார் மூ பா அணியின் நிறுவனரான நோபராட் கந்தவாங். இவர்கள் நால்வரும் நாடற்றவர்கள் என்பது தற்போதைய நிகழ்வின் மூலம் உலகிற்கே தெரியவந்துள்ளது.

இவர்களைப் போன்று ஆயிரக்கணக்கில் தாய்லாந்தில் வசித்துவரும் மக்களுக்கு, இதுவரை குடியுரிமை அளிக்கப்படவில்லை; தாம் லுவாங் குகை மீட்பு நடவடிக்கையின் மூலமாக, இதற்கான எச்சரிக்கை மணி அடித்துள்ளது என்று கூறியுள்ளார் தாய்லாந்திலுள்ள ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பைச் சேர்ந்த பார்ன்பென். தாய்லாந்தில் குடியுரிமையற்ற அகதிகளாக சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

“குடியுரிமை பெறுவோம் என்ற நம்பிக்கையில் அந்தச் சிறுவர்கள் உள்ளனர். சியாங் ராய் மாகாணத்துக்கு வெளியே விளையாடச் செல்லும்போது, இதனால் அவர்கள் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். தாய்லாந்து குடியுரிமை கிடைக்காவிட்டால், அவர்களால் பெரியளவில் கால்பந்து வீரர்களாக ஜொலிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார் நோபராட். இவர் மூ பா அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் இருந்துவருகிறார்.

தாய்லாந்து அரசு இதுதொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டால், பெரும்பான்மை மக்கள் அதனை எதிர்க்கமாட்டார்கள் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு, தற்போது எக்கபோல் சாண்டவாங் அந்நாட்டில் கொண்டாடப்படுகிறார். கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று ஒரு பயிற்சி ஆட்டத்தை முடித்துக்கொண்டு சைக்கிளில் வீடு திரும்பிய மூ பா அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும் தாம் லுவாங் குகைக்குள் சென்றனர். அவர்களை அழைத்துச் சென்ற எக்கபோல் சாண்டவாங், இதுமாதிரியான புதுவித சூழலை சிறுவர்கள் எதிர்கொள்ள வேண்டுமென்று விரும்புபவர். ஆனால், திடீரென பெய்த மழையும், அதனால் பெருகிய வெள்ளமும், அவர்களை தாம் லுவாங் குகை வாயிலில் இருந்து சுமார் மூன்றரை கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்கச் செய்தது. கிட்டத்தட்ட 9 நாட்களுக்குக்குப் பிறகு இங்கிலாந்து டைவிங் வீரர்கள் இருவர் வந்து பார்த்தபிறகே, அவர்கள் உயிரோடு இருப்பது உலகிற்குத் தெரியவந்தது. அதன் பிறகும், 9 நாட்களுக்குப் பிறகே அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

பத்தாவது நாளிலிருந்து டைவிங் வீரர்கள், அவர்களுக்குத் தேவையான உணவுகளையும் மருந்துகளையும் எடுத்துவரத் தொடங்கினர். போதுமான ஆக்சிஜன் கிடைக்கவும் வழிவகை செய்தனர். அதற்கு முன்னர் அந்தச் சிறுவர்கள் மயக்கமடையாமல் இருக்கவும், பதற்றப்படாமல் இருக்கவும் காரணமாக இருந்தவர் எக்கபோல் மட்டுமே.

குகைக்குள் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு எதிலும், அந்தச் சிறுவர்கள் பயந்ததாகவோ, பதட்டப்பட்டதாகவோ தெரியவில்லை என்று தாய்லாந்து தொலைக்காட்சியொன்றில் தெரிவித்துள்ளார் ஒரு பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய். இந்த ஆச்சரியம், இந்த நிகழ்வை உற்று நோக்கிய பலரது மனதில் தங்கியுள்ளது. இரண்டு வார காலத்திற்கும் அதிகமாக உடலில் சக்தியைச் சேமிக்கவும், மனதில் அமைதியை உருவாக்கவும், சிறுவர்கள் மேற்கொண்ட தியானம் மட்டுமே அடிப்படைக் காரணம்.

எக்கபோல் வழிகாட்டுதலுடன் இதனை மேற்கொண்டதாலேயே, இரண்டு வாரத்திற்குப் பிறகும் அந்தச் சிறுவர்களுக்கு டைவிங் பயிற்சி அளித்து மீட்பது சாத்தியமாகியுள்ளது. எக்கபோல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தியானம் செய்யும் வழக்கமுள்ளவர் என்று கூறியுள்ளார் அவரது உறவினர் தாம் சாந்தவோங். தியானம், யோகாவைச் செய்ய வைத்ததோடு அல்லாமல், தனக்கான உணவையும் சிறுவர்களுக்குத் தந்துள்ளார் எக்கபோல். அவரது செயல்பாடுகள் டைவிங் வீரர்களின் மூலமாகத் தற்போது உலகிற்குத் தெரியவந்துள்ளன.

25 வயதுள்ள எக்கபோல் சாண்டவாங், தனது 10ஆவது வயதில் குடும்பத்தினர் அனைவரையும் பறிகொடுத்தார். அவர்கள் அனைவரும் ஒரு நோய்க்கு ஆளாகி இறந்தனர். இதனால் மியான்மரில் இருந்து அவர் மா சே பகுதிக்கு இடம்பெயர்ந்தார். அப்போது புத்த மடமொன்றில் துறவியாகச் சேர்ந்தார். தியானம் உள்ளிட்ட பயிற்சிகளைக் கற்றார். முழுநேரத் துறவியாக அவர் மாறவிருந்த நிலையில், அவரது பாட்டி உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டார். அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமையின் காரணமாக, அவர் மீண்டும் மா சே பகுதிக்கு வந்தார். மூ பா கால்பந்து அணியின் உதவிப் பயிற்சியாளராகச் சேர்ந்தார். புகை, மது உள்ளிட்ட எந்த கெட்டபழக்கங்களும் எக்கபோலுக்கு கிடையாது என்றும், அவர் தன்னை விட அதிகமாக மூ பா அணியிலிருந்த சிறுவர்களை நேசித்துவருகிறார் என்றும் தெரிவித்துள்ளார் அவரது நீண்டநாள் நண்பர் ஜாய் கம்பாய்.

தாம் லுவாங் குகைக்கு 12 சிறுவர்களை அழைத்து வந்ததற்காக, அவர்களது பெற்றோர்களிடம் மன்னிப்புக் கோரி கடிதம் எழுதினார் எக்கபோல். கடந்த 7ஆம் தேதியன்று இதனைத் தங்களது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது தாய்லாந்து கடற்படை. இந்த நடவடிக்கைக்குப் பிறகு, அவர் மீதான மதிப்பு தாய்லாந்து மக்களிடையே பன்மடங்கு உயர்ந்துவிட்டது. குகையிலிருந்து சிறுவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட டைவிங் வீரர்கள், 13 பேரில் எக்கபோல் மட்டுமே மிக மோசமாக உடல் நலிவடைந்ததாகத் தெரிவித்துள்ளனர். சியாங் ராய் மருத்துவமனையில், மீட்கப்பட்ட 13 பேருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த மீட்பு நடவடிக்கையில் முக்கியப் பங்கு வகித்தவர் என்று ஆஸ்திரேலிய மருத்துவர் ரிச்சர்ட் ஹாரிஸைப் பாராட்டியுள்ளது தாய்லாந்து அரசு. நேற்று இவரது தந்தை ஜேம்ஸ் ஹாரிஸ் திடீரென மரணமடைந்ததால், இவர் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. ஆனால், ஆஸ்திரேலிய அரசிடம் இந்த மீட்பு நடவடிக்கை பற்றி தகவல் கூறியுள்ளார். அதில், மீட்பு நடவடிக்கையைவிட இத்தனை நாட்களும் குகைக்குள் தைரியமாக இருந்த 12 சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் மட்டுமே பாராட்டப்பட வேண்டியவர்கள் என்று தெரிவித்துள்ளார். அவர்கள் அப்படியிருக்காவிட்டால் தங்களால் எதையும் சாதிக்க முடிந்திருக்காது என்று கூறியுள்ளார். மறுக்க முடியாத இந்த உண்மையின் வழியாக, எக்கபோல் சாண்டவாங் எனும் மனிதன் தாய்லாந்து குடியுரிமை அற்றவர் என்ற உண்மையும் உலகிற்குத் தெரியவந்துள்ளது.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon