மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

நீட் கருணை மதிப்பெண்: கேவியட் மனு!

நீட் கருணை மதிப்பெண்: கேவியட் மனு!

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று (ஜூலை 11) உச்ச நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 6ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் ஆங்கிலம், ஹிந்தி மொழிகள் அல்லாது, தமிழ் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளிலும் வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. பிற மொழி வினாத்தாள்களில் ஆங்கில மொழியிலும் வினாக்கள் இடம்பெற்றிருந்தன.

இதில், தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் வழக்கு தொடர்ந்தார்.

நேற்று (ஜூலை 10) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், 49 தவறாக மொழிபெயர்க்கப்பட்ட கேள்விகளுக்கான 196 கருணை மதிப்பெண்களை வழங்க வேண்டுமென்று சிபிஎஸ்இ அமைப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் புதிய தரவரிசைப் பட்டியலைத் தயாரிக்க வேண்டுமென்றும், அதன் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டுமென்றும் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ அமைப்பு மேல்முறையீடு செய்யும் எனக் கூறப்படுகிறது. எனவே, இந்த வழக்கு தொடர்பாக, டி.கே.ரங்கராஜன் இன்று (ஜூலை 11) உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார். இதன்மூலம், நீட் கருணை மதிப்பெண் வழக்கு தொடர்பாக யார் மனு தாக்கல் செய்தாலும், மனுதாரரின் கருத்தை பெற்றுக்கொண்ட பின்புதான் தீர்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் சிபிஎஸ்இ முடிவைப் பொறுத்து, அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்தார்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon