மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

கார்களைத் திரும்பப் பெறும் டொயோடா!

கார்களைத் திரும்பப் பெறும் டொயோடா!

எரிபொருள் குழாயில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளைச் சரிசெய்து தருவதற்காக இன்னோவா கிரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகிய மாடல் கார்களைத் திரும்பப் பெறுவதாக டொயோடா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த டொயோடா மோட்டார் கார்பரேஷன் நிறுவனத்தின் ஒரு அங்கமான டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ், பெங்களூரு நகரை மையமாகக் கொண்டு இந்தியாவில் கார்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், இன்னோவா கிரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகிய கார்களில் ஏற்பட்டுள்ள குறையைத் தானாகவே முன்வந்து சரிசெய்து தருவதாக அறிவித்துள்ளது. மேற்கூறிய இரண்டு மாடல்களிலும் பெட்ரோலில் இயங்கும் கார்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும். மேலும், 2016 ஜூலை 21 முதல் 2018 மார்ச் 22 வரையில் தயாரிக்கப்பட்ட கார்களில் ஏற்பட்ட கோளாறுகள் மட்டுமே சரிசெய்து தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக டொயோடா நிறுவனம் தெரிவித்துள்ளது. எத்தனை கார்கள் திரும்பப்பெறப்படுகின்றன என்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், கோளாறுகள் இலவசமாகவே சரிசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள தகுதியுடைய கார்களின் உரிமையாளர்களுக்கு டீலர்களிடமிருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தகவல் கிடைக்காதவர்கள் தாங்களே டீலர்களை அழைத்து சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம் எனவும் டொயோடா நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கு முன்னரே இன்னோவா கிரிஸ்டா கார்கள் சென்ற மே மாதத்திலும், ஃபார்ச்சூனர் கார்கள் 2016 அக்டோபரிலும் சில கோளாறுகளுக்காகத் திரும்பப்பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon