மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

சச்சினைக் கவர்ந்த ஃபெடரர்

சச்சினைக் கவர்ந்த ஃபெடரர்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஃபார்வர்டு டிஃபன்ஸ் ஷாட்டை டென்னிஸ் மட்டையால் அடித்த ரோஜர் ஃபெடரரின் செயல் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சினைக் கவர்ந்துள்ளது.

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் ஏழு முறை உலக சாம்பியனான ரோஜர் ஃபெடரர், பிரான்ஸின் அட்ரியன் மரிநோவை வீழ்த்திக் காலிறுதிக்குள் நுழைந்தார். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவுடன் ஃபெடரர், கிரிக்கெட் வீரர்கள் ஆடும் ஃபார்வர்டு டிஃபன்ஸ் ஷாட்டை டென்னிஸ் மட்டையால் அடித்தார். இது குறித்து விம்பிள்டன் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த வீடியோ சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் தெண்டுல்கர், "கைகளுக்கும் கண்களுக்கும் நல்ல ஒருங்கிணைப்பு இருந்தது. நீங்கள் ஒன்பதாவது விம்பிள்டன் பட்டத்தை வென்று வந்த பின் கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் இரண்டுக்கும் இடையிலான குறிப்புகளைப் பரிமாறிக்கொள்வோம்" என்று கிண்டலாகப் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த ஃபெடரர், "சரி பொறுங்கள். நான் குறிப்பு எடுத்துக்கொள்ளத் தயாராக வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக விம்பிள்டன் இந்த வீடியோவுடன், ஃபெடரரின் இந்த ஷாட்டை எப்படி மதிப்பிடுவீர்கள் என்று கிண்டலாக ஐசிசிக்கு கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தது. இதற்குப் பதிலளித்த ஐசிசி, டெஸ்ட் தர வரிசையில் ஃபெடரரின் பெயர் முதலிடத்தில் இருப்பது போல எடிட் செய்து பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஃபெடரர், தென்னாப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்த்து விளையாடிவருகிறார். சற்று முன்பு வரை உள்ள நிலவரப்படி ஃபெடரர் முதல் செட்டை 6-2 என்று கைப்பற்றியிருக்கிறார்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon