மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

வர்த்தகப் போர்: அடங்காத அமெரிக்கா!

வர்த்தகப் போர்: அடங்காத அமெரிக்கா!

200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு வரி விதிக்க அமெரிக்க அரசு தயாராகி வருகிறது.

திருடர் எச்சரிக்கை மணி (burglar alarm) முதல் கானாங்கெளுத்தி மீன் வரை சுமார் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 6,031 பொருட்களுக்கு 10 விழுக்காடு வரி விதிப்பதற்கு அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் முன்மொழிந்துள்ளது. இந்த முன்மொழிதல் குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்பதற்காக, கருத்து கேட்பு கூட்டங்களையும் வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் நடத்தவுள்ளது. ஆகஸ்ட் 20 முதல் 23ஆம் தேதி வரை கருத்து கேட்பு கூட்டங்கள் நடைபெறும். ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பிறகு வரி விதிப்பு குறித்த முடிவு எடுக்கப்படும்.

ஜூலை 6ஆம் தேதியன்று, 34 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு 25 விழுக்காடு வரியை அமெரிக்கா விதித்திருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக 34 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க சரக்குகளுக்கும் சீன அரசு வரி விதித்தது. தற்போது மேலும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு வரி விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதால், இரு பெரும் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் மிகத் தீவிரமடைந்துள்ளது. சீனப் பொருட்களுக்கு 550 பில்லியன் டாலர் மதிப்பில் வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டொனால்டு ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகள் குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களும் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றனர். இறக்குமதிப் பொருட்கள் மீது வரி விதிக்கப்படுவதால், நுகர்வோருக்கான விலைகள் உயர்வதோடு, அமெரிக்க விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் மீது வர்த்தகப் போரின் சுமை சுமத்தப்படுவதாகவும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon