மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

வாட்ஸ் அப் வதந்தி:களமிறங்கும் காங்கிரஸ்!

வாட்ஸ் அப் வதந்தி:களமிறங்கும் காங்கிரஸ்!

வாட்ஸ் அப் சமூக வலைதளத்தை பொறுப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.

அரசியல் கட்சிகள் பொதுமக்களை நேரில் சென்று சந்திப்பதோடு சமூக வலைதளங்கள் மூலமும் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன. இதுபோன்ற வாட்ஸ் அப் பிரச்சாரங்களில் தங்களின் கட்சியை பற்றி பெருமையாக குறிப்பிடுவதைவிட எதிர்கட்சிகளை பற்றிய விமர்சனங்களையே பல கட்சிகளும் செய்து வருகின்றன. இதில், பெரும்பாலான பிரச்சாரங்களை தவறானவையாகவும் தனி மனித தாக்குதல் நிறைந்தவையாகவும் உள்ளன.

மேலும், மத, மொழி, இன ரீதியாகவும் வாட்ஸ் அப்பில் வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதனால் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்படுகின்றன. சமீப காலமாக குழந்தை கடத்தல் தொடர்பாகத் தமிழகத்தில் பரவும் வாட்ஸ் அப் வதந்தியால் வட மாநிலத்தவர் தாக்குதலுக்கு உள்ளாவது கவனிக்கத்தக்கது.

இந்தியாவில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் அக்கவுண்ட் பயன்படுத்தப்படும் நிலையில் பொய் செய்திகள் பரவல் என்பது முக்கிய பிரச்சினையாக உருவாகியுள்ளது. பொய் செய்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசும் அண்மையில் வாட்ஸ் அப் நிறுவனத்திடம் தெரிவித்திருந்தது.

வதந்திகளைக் கட்டுப்படுத்த வாட்ஸ் அப் நிறுவனமும் புதிய அப்டேட்டை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வாட்ஸ் அப் சமூக வலைதளத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும், வெறுமனே வெறுப்புணர்ச்சி பரவலுக்கு மட்டும் அதை பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கைகளை முன்வைத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

பஞ்சாப் அமைச்சர் விஜயேந்தர் சிங்க்லா, ஹரியானா மற்றும் சத்தீஸ்கர் சட்டமன்ற உறுப்பினர்கள் கிரண் சௌத்ரி மற்றும் டி.எஸ். சிங்க் டியோ மற்றும் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் சாகீல் அகமது ஆகியோர் இதில் பிரதானமானோர் ஆவர்.

சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பது அரசின் வேலை என்றும் இதற்கு தொழில்நுட்ப நிறுவனத்தைக் குற்றம் சாட்டுவது என்பது பலிகடாவை தேடுவது போன்றது என்றும் காங்கிரஸ் தரப்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் வதந்தி விவகாரத்தை மத்திய அரசு கண்டும் காணாமலும் இருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரமோத் திவாரி குற்றம் சாட்டியுள்ளார். “2017ஆம் ஆண்டில் மட்டும் வதந்தி காரணமாக 61 கொலை சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல், விஜேந்திர சிங்க்லா, “இந்த நாட்டைப் பேரழிவுக்கு இட்டுச் செல்லும் மாடு மனநிலையின் ஒரு பகுதியாக நாம் இருக்க வேண்டாம். பிரகாசமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் கடமைமிக்க குடிமக்கள் என்பதற்கான எடுத்துக்காட்டுகளை முன் வைப்போம். #iUseWhatsappResponsiblyResponsibly இன் ஒரு பகுதியாக இருங்கள்” என்று ட்விட் செய்துள்ளார்.

இதேபோல் சிங்க் டியோ தனது ட்விட்டர் பக்கத்தில், “வாட்ஸ் அப் போன்ற தளங்கள் வெறுப்பு மற்றும் குற்றங்களை தூண்டப் பயன்படுத்தப்படுகிறது என்பது கவலையை ஏற்படுத்துகிறது. எனினும், நீயும் நானும் இதனைத் தடுத்து நிறுத்த முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.

#iUseWhatsappResponsiblyResponsibly என்ற ஹேஷ்டேக்கின் கீழ் வாட்ஸ் அப்பை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்ற பதிவுகளையும் காங்கிரஸார் பதிவிட்டு வருகின்றனர்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon