மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

ஆம்புலன்ஸ் ஃபர்ஸ்ட்; விஐபிக்கள் கார் நெக்ஸ்ட்!

ஆம்புலன்ஸ் ஃபர்ஸ்ட்; விஐபிக்கள் கார் நெக்ஸ்ட்!

அவசர சிகிச்சைக்காக வேகமாக நோயாளியை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் இனி விஐபிக்கள் கார்கள் செல்லும் வரை காத்திருக்க தேவையில்லை என பெங்களூரு மாநகரத்தின் காவல் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில காவல் துறைத் தலைவர் நீலமணி என்.ராஜூவின் உத்தரவின்படி, சாலையில் விஐபி செல்லும் பாதையில் அவருக்குப் பாதுகாப்பாகச் செல்லும் வாகனங்கள் அனைத்தும், நோயாளிகளின் அவசர சிகிச்சைக்காக அவர்களை ஏற்றிச்செல்லும் ஆம்புலன்ஸுக்கு வழிவிட வேண்டும் என பெங்களூரு காவல் துறை ஆணையர் டி.சுனில் குமார் ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்தார்.

மாநிலத் துணை முதல்வர் மற்றும் உள் துறை அமைச்சரான ஜி.பரமேஸ்வரா ராஜூவுக்கு எழுதிய ட்விட்டர் பதிவில், விஐபி பாதுகாவல் வாகனங்களை நிறுத்தி ஆம்புலன்ஸுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டதோடு, இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றார்.

இதுகுறித்து அவரது ட்வீட் பதிவில், சில நேரங்கள் ஆம்புலன்ஸை நிறுத்தி எனது பாதுகாவல் வாகனங்கள் செல்வதற்கு ஏற்ப அனுசரித்து எனக்கு வழிவிடுவதை நான் கவனித்து வந்துள்ளேன். உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளித்து அவரை மீட்பதைவிட முக்கியமானது ஒன்றுமில்லை. முன்னோக்கி செல்லும், விஐபி காவல் வாகனங்கள் செல்வதற்காக எந்த ஆம்புலன்ஸும் நிறுத்தப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கையில், கடந்த மாதம் பரமேஸ்வரா காவல் வாகனங்கள் செல்வதற்காக கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் மருத்துவமனைக்கு வேகமாகச் சென்றுகொண்டிருந்த ஓர் ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதேபோல கடந்த ஆண்டு ஜூன் மாதம், அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சாலையில் வருகிறார் என முன்னே சென்றுகொண்டிருந்த காவல் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி மருத்துவமனைக்குப் போய்க்கொண்டிருந்த ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் செல்வதற்கு வழி ஏற்படுத்தித் தந்த ஒரு காவல் உயரதிகாரி நிஜலிங்கப்பா மாநகரக் காவல் ஆணையரால் பாராட்டப்பட்டார்.

விஐபி செல்லும்பாதையில் ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட வாகனப் போக்குவரத்துகள் நிறுத்தப்படும்போது, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் ஒரு மனித உயிருக்கான சிகிச்சை மேலும் தாமதப்படும்பட்சத்தில் சிலருக்கு விலைமதிப்பற்ற அந்தப் பொன்னான நேரம் வாழ்வின் கடைசி மணித்துளிகளாகக்கூட இருக்கும்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது