மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜுன் 2018

கால்பந்தாக உருட்டப்பட்ட காலா!

கால்பந்தாக உருட்டப்பட்ட காலா!

இராமானுஜம்

மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 18

தமிழ் சினிமாவின் தொடக்க கால வளர்ச்சி கோவை, சேலம் நகரங்களில்தான் என்பது வரலாறு. அதன் பாதிப்புதான் சினிமாவை இந்தப் பகுதியில் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்பார்கள்.

அதிகமான திரையரங்குகள், குறைவான விநியோகஸ்தர்கள் இருக்க கூடிய சேலம் விநியோக பகுதி பல சிறப்புகளைக் கொண்டது. கர்நாடக மாநில எல்லையைக் கொண்டுள்ளதால் தெலுங்கு, இந்திப் படங்கள் தமிழ்ப் படங்களுக்கு இணையாக வசூல் செய்வதுண்டு.

தென் மாவட்டங்களில் மினிமம் கேரண்டி முறையில் தியேட்டர்கள் படங்களை திரையிட்டு தொடர் நஷ்டத்தைச் சந்தித்துவரும் நிலையில் மினிமம் கேரண்டி முறைக்கு முடிவுகட்டிய பகுதி சேலம்.

படங்களை எப்படித் திரையிடுவது என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திரையரங்குகள் இங்கு ஆதிக்கம் செலுத்துவதால் விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்களுடன் அனுசரித்துப்போக வேண்டிய சூழல். அதனாலேயே சேலம் ஏரியாவுக்குப் படம் வாங்குவதற்குப் புதிய விநியோகஸ்தர்கள் விரும்புவதில்லை.

புதிய படங்களை ஷிப்டிங் முறையில் திரையிட்டுத் தொழில் செய்துவந்த விநியோகஸ்தர்கள் அதிகம் இருந்த பகுதி சேலம் ஏரியா. இப்போது அதற்கு வேலையில்லை, எந்தப் படமாக இருந்தாலும் அதன் தலைவிதியை மூன்று நாட்களில் தீர்மானித்துவிடும் வகையில் நகரத்திலிருந்து குக்கிராமம் வரை குறைந்த பட்சம் 30 முதல் அதிகபட்சம் 80 தியேட்டர்கள் வரை புதிய படங்கள் திரையிடப்படுகின்றன.

தமிழகத்தில் காலா படம் முதலில் வியாபாரம் முடிந்த ஏரியா சேலம். அதன் விலையை அடிப்படையாக கொண்டே பிற ஏரியாக்களின் உரிமைக்கான விலை தீர்மானிக்கப்பட்டது.

கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் ரஜினி நடிப்பில் தொடர்ந்து வெளியான மூன்று படங்களை ஒரே ஏரியாவில் வாங்கிய விநியோகஸ்தர் சேலம் 7G சிவா. லிங்கா, கபாலி தற்போது காலா இந்த மூன்று படங்களின் சேலம் ஏரியா உரிமையை வாங்கித் தொடர் நஷ்டத்தில் இருப்பவர் சிவா.

லாபம் என்பதைத் தாண்டி, இந்தப் படம் தன்னிடம் இருக்க வேண்டும் என்று முடிவெடுப்பதால் படம் வாங்குவதற்கு ஆளில்லாத சேலம் ஏரியாவுக்குப் படங்களை அவுட்ரேட் முறையில் வியாபாரம் செய்துவருபவர் சிவா.

லைக்காவுக்கும் இவருக்குமான நட்பு, புரிதல் காரணமாக காலா படத்தின் முதல் வியாபாரத்தை ரூ 5.5 கோடிக்கு அவுட்ரேட் முறையில் சேலம் சிவாவுக்கு வழங்கியது லைக்கா நிறுவனம்.

ரஜினிகாந்த் படங்களை தியேட்டரில் திரையிடக் கடுமையான போட்டி இருக்கும். ஆனால், காலா படத்தைத் திரையிட சேலத்தில் எவரும் ஆர்வம் காட்டவில்லை.

படத்தைத் திரையிடுகிறோம்; ஆனால், அட்வான்ஸ் கிடையாது என்பதில் தியேட்டர்காரர்கள் பிடிவாதமாக இருந்தனர் என்கிறார்கள் சேலம் சினிமா நகர்வாசிகள்.

அதற்கு காரணம் லிங்கா, கபாலி இரண்டு படங்களும் தோல்விப் படங்கள். இவ்விரு படங்கள் வெளியானபோது அதிகபட்சமான அட்வான்ஸ் ஒரே இடத்தில் முடங்கியது. இதனால் அடுத்தடுத்து வந்த படங்களை திரையிட அட்வான்ஸ் கொடுக்க முடியாத அளவு தமிழ் சினிமா பைனான்சியர்கள் மத்தியில் பண முடக்கம் ஏற்பட்டது.

அந்த அனுபவத்தின் அடிப்படையில் காலா கால்பந்தாக உருட்டப்பட்டது சேலம் ஏரியாவில். விநியோகஸ்தரின் தனிப்பட்ட அணுகுமுறையாலேயே காலா படத்திற்கு அதிகபட்ச அட்வான்ஸ் தொகை வாங்க முடிந்தது, இல்லை என்றால் காலா சேலம் ஏரியாவில் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார் என்கிறது சேலம் தியேட்டர் வட்டாரம்.

தமிழ்நாட்டில் குறைவான டிக்கட் கட்டணம் வசூலிக்கப்படும் தியேட்டர்கள் சேலத்தில் அதிகம். கட்டணங்கள் பார்வையாளர்களை பயமுறுத்தாமல் குடும்பங்கள் படம் பார்க்க வர வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் ஏரியா சேலம். பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது சினிமா பார்வையாளர்கள் அதிகம் இருக்கும் ஏரியாவும் சேலம் தான்.

காலா படம் திரையிட்ட தியேட்டர்களில் ரஜினி கட் அவுட்களும், செட்டுகளும் சேலம் ஏரியா அதிகம் இருந்தன. ரிலீஸ் அன்று காலா முக்கிய நகரங்கள், மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் மட்டுமே ரஜினி படத்துக்கான ஓப்பனிங் இருந்தது. பிற தியேட்டர்களில் காலா வசூல் கல்லாவை கஷ்டப்படுத்தி பயமுறுத்தியது.

முன்னணி நடிகர்களின் படங்கள் திரையிட்டால் முதல் மூன்று நாட்களில் படத்துக்காக கொடுத்த விலை, அல்லது அட்வான்ஸ் தொகையில் 70% வசூலாகிவிடக் கூடியது சேலம் ஏரியா.

போட்டிக்கு எந்தப் படமும் இன்றி மொத்த திரையரங்குகளையும் ஆக்கிரமித்து திரையிடப்பட்ட காலா செய்த வசூல் இதுவரை ரஜினிகாந்த் படங்கள் செய்திராத வசூல் சாதனையா?

நாளை...

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

காலாவுக்காக விஷால் மௌன விரதமா?

வாய்ப்பை வீணடித்த ரஜினி

பரபரப்பு இல்லாத ஓப்பனிங்

குடை சாய்ந்த கோபுரம்!

ஆட்டம் காணும் சூப்பர் ஸ்டார் அரியணை

காலா வசூலித்த 100 கோடியைத் தேடி...

எங்கே அந்த நூறு கோடி?

காலா கணக்கு: எனக்கு 20 உனக்கு 10!

கோவையில் வெளுத்த காலா சாயம்!

காலாவைக் காப்பாற்றிய செங்கல்பட்டு!

வட ஆற்காட்டில் சிதைந்த 6 கோடிக் கனவு!

சனி, 16 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon