மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

சிறப்புத் தொடர்: இரும்பைத் தாக்கிய இரும்பு!

சிறப்புத் தொடர்: இரும்பைத் தாக்கிய இரும்பு!

ஹரிஹரசுதன் தங்கவேலு

தாவூத் இப்ராஹிம் பற்றிய தொடர் - 4

1950களுக்குப் பிறகான காலகட்டங்களில் பம்பாயின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. வெளிச்சத்தை நோக்கி பறக்கும் விட்டில் பூச்சிகள்போல, இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களிலிருந்தும் மக்கள் கூட்டமாக பம்பாயில் குடியேறினர். புதிய தொழில்கள், கடைநிலைப் பணிகள், வியாபாரங்கள், உற்பத்தி, பருத்தி ஆலைகள் என பம்பாய் தன்னையும் வளர்த்து இந்தியாவையும் சேர்த்து வளர்த்தது. புதிய வாய்ப்புகளுக்கும், சாம்ராஜ்யக் கனவுகளுக்கும் பம்பாய் தன் வணிகக் கதவுகளைத் திறந்து வரவேற்றது. இந்தியாவின் அறிவிக்கப்படாத நிதி நகரமாக உருவெடுத்தது. பம்பாயின் அசுர வளர்ச்சியில் இந்தியா மெதுவாகத் தலை நிமிரத் துவங்கிய காலம். கூடவே மாபியா தாதாக்களும், அவர்தம் சட்ட விரோதத் தொழில்களும் தலையெடுத்தன. கள்ள சாராயம், போதை வஸ்து கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், வழிப்பறி, தொழில் போட்டியில் ஆட்கடத்தல், கேங் வார் என நிதி நகரமான பம்பாய் ‘க்ரைம்’ நகரமாக மாறத் துவங்கியது. பம்பாயின் இன்னொரு முகமான இந்த மாபியா நிழல் உலகை, ஆரம்ப காலங்களில் தங்கள் வசம் வைத்திருந்த டான்கள் மூன்று பேர்.

• ‘வரதா பாய்’ என்கிற வரதராஜன் முதலியார்.

• ‘சுல்தான்’ என்கிற ஹாஜி மஸ்தான்.

• ‘கரீம் லாலா’ என அழைக்கப்பட்ட அப்துல் கரீம் ஷேர் கான்.

வரதராஜன் முதலியார் தமிழர். 1926இல் வேலூரில் பிறந்தவர். தொழிற்சங்கத் தலைவரான அவர் தந்தை ஒரு போராட்டத்தில் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். தந்தை இறந்ததும் பிழைப்பிற்காக 1945இல் பம்பாய் வந்த அவர் செய்த முதல் தொழில், மும்பை ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் போர்ட்டர். பிறகு மும்பை வாழ் தமிழர்களின் ‘நாயகனாக’ மாறிய வரதாபாய், பம்பாயின் பிரதான குப்பங்களான தாராவி, மஹிம், மதுங்கா என ஆரம்பித்து செம்பூர் வரை தன் தாதா ராஜ்ஜியம் அமைத்தார்.

நாயகன் திரைப்படத்தில் வேலு நாயக்கர் கதாபாத்திரம், வரதராஜன் முதலியாரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான்! திரைக்கதையில் வருவதை போலவே இந்திய அரசுக்கு இணையான ஒரு நிழல் அரசாங்கத்தை பம்பாய் தமிழ் மக்களுக்காக நிஜத்தில் நடத்தியவர் வரதா பாய்.

கரீம் லாலா, ‘பதான்’ சமூகத்தைச் சேர்ந்தவர். பிறந்தது ஆப்கானிஸ்தானில். 1930களிலிருந்தே பதான் சமூகத்தினரின் மூத்த தலைவர். ‘பதான் கேங்’ பம்பாயில் எழுதிய ரத்த சரித்திரத்தை மட்டும் பல புத்தகங்கள் எழுதலாம். பம்பாயின் அத்தனை சட்ட விரோதக் குழுக்களிலும், பலம் பொருந்திய, முரட்டு, கொடூர மாபியா கரீம் லாலாவுடையது. அதற்கு ஒரு காரணம், சமத் கான். கரீம் லாலாவின் அண்ணன் மகன். முன்கோபியும் பெண் பித்தனுமான சமத் கான் வன்புணர்வு, பணம் தராதவர்களைச் சுட்டுக் கொலை செய்தல், வழிப்பறி, வன்முறை எனப் பல வழக்குகளில் தேடப்பட்டுவந்தாலும், காவல் துறையால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை! தாவூத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு சமத் கானும் ஒரு வகையில் காரணம். அது எப்படி என்பதை விரைவில் பார்க்கலாம்.

அடுத்து, ஹாஜி மஸ்தான். தொடரின் முதல் பகுதியில் இவரைப் பற்றிப் படித்தது நினைவிருக்கலாம். இஸ்லாம் சமூகத்தினரின் ‘காட்பாதர்’, பெந்தி பஜார், டோங்க்ரி, நக்படா ஏரியாக்களைத் தன் வசம் வைத்திருந்தவர். தாதாயிஸத்தில் யார் பெரியவன் என்ற மோதல்கள் இந்த மூவருக்குள் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், தமக்கான இடங்களையும் வியாபாரங்களையும் பிரித்து மானசீக உடன்படிக்கை செய்துகொண்டு கோலோச்ச ஆரம்பித்தனர். இவர்களுடைய அடுத்த தலைமுறையோ இந்த உடன்படிக்கைகளையெல்லாம் சிறிதளவும் மதிக்கவில்லை. கரீம் லாலாவின் மகன்கள் தங்கள் விருப்பத்துக்கு, நகரின் எல்லா இடங்களிலும் வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து என மூக்கை நுழைந்தனர். இது ஹாஜி மஸ்தானுக்குக் கோபமூட்டியது.

கரீம் லாலாவின் கேங் பெயர் – ‘பதான் கேங்’, மஸ்தானின் கேங் – ‘தேசி கேங்’. மஸ்தான் இந்த ‘பதான் கேங்’கிற்கு பாடம் புகட்ட சரியான ஒருவனை எதிர்பார்த்து காத்திருந்தார். அவரிடத்தில் தாவூத்தின் துணிகரக் கொள்ளைச் செய்தி வந்து சேர்ந்தது. கூடவே தாவூத்தும். ஆம், காவல் நிலையத்தில் இருந்து தன் மகன்களை அழைத்து வந்த கஸ்கர், நேரே ஹாஜி மஸ்தானிடம் வந்து தன் மகன்களை ஒப்படைத்தார். தன் மகன்களுக்கு ஒரு நல்ல வேலை தருமாறு மஸ்தானிடம் கேட்டுக்கொண்டார்.

ஹாஜி மஸ்தான் முதல் முறையாக தாவூத்தைப் பார்த்தார். கண்களில் துளி பயமோ நடந்த தவறுக்கு வருத்தமோ இல்லை! மாறாக அதில் பரிதாபம் இருந்தது. தந்தையின் மீதான பரிதாபம். அவர் இயலாமையின் மீதான வருத்தம். சகோதரர்கள் இருவரையும் மோஹத்தா மார்க்கெட்டின் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் கடையில் பணியில் அமர்த்தினார். தாவூத்திற்குக் கை கட்டி வேலை பார்ப்பதில் இஷ்டமில்லை, மஸ்தானின் ‘தேசி கேங்’ செயல்பாடுகள் மீது அவன் முழுக் கவனமும் இருந்தது. அதே நேரம், நகரின் பிரதான இடங்களை பதான்கள் ஆக்ரமித்தார்கள். வியாபாரிகள் பணம் கேட்டு மிரட்டப்பட்டனர். எதிர்ப்பவர்கள் கடத்தப்பட்டனர். அதையும் மீறிக் காவல் நிலையம் செல்பவர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர். பதான்கள் நகரம் முழுவதும் தங்கள் தாதாயிஸத்தைப் பரப்பினார்கள். காவல் துறையின் கெடு பிடிகளுக்கும் இவர்கள் அடங்கவே இல்லை. கட்டப் பஞ்சாயத்து, அடிதடி என மிரட்டி வசூல் செய்தனர். பதான்கள் மீது வழக்குகள் தினம் தினம் குவிந்தன. மேலிட உத்தரவுக்காகக் காத்திருந்தே காவல் துறையின் காலம் கழிந்தது.

ஒரு கட்டத்தில் பதான்களின் தலைவன் கரீம் லாலாவிடம், காவல் துறை உயரதிகாரிகள் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சட்ட விரோதச் செயல்களை நிறுத்தச் சொன்னார்கள், அதற்கு கரீம் லாலா இசையவில்லை. மாறாக, தன் ஆட்கள் மூலம் காவல் நிலையத்தையே தாக்கினார். இந்த அட்டூழியங்களுக்கு ஒரு முடிவு கட்ட நினைத்தார் இன்ஸ்பெக்டர் ரன்பீர் லிகா. பதான்களின் கொட்டத்தை அடக்க அவரது நண்பனான இஃபால் நடிக் எனும் கிரைம் ரிப்போர்ட்டரின் ஆலோசனை கேட்டார். சில பல யோசனைகளுக்கு பிறகு, விளையாட்டாக சொன்னார் இஃபால்.

“சார்! ஷோலே படத்தில் சொல்வது போல செய்யலாமா?”

இன்ஸ்பெக்டர் லிகா சிரித்துக்கொண்டே கேட்டார். “ஷோலேவா? என்ன சொல்ற இஃபால்?!”

“சாஹிப், இரும்பை அடிக்க வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு இரும்புதான் சரி! ஷோலேவில் வசனம் வருமே, அந்த மாதிரி.”

இன்ஸ்பெக்டர் லிகா ஆர்வத்தில், தன் காதுகளில் கூர்மை தீட்டிக்கொண்டு கேட்டார்.

“அது சரி! யாரந்த இன்னொரு இரும்பு?”

பதற்றமே இல்லாமல் சொன்னார் இஃபால். “தாவூத் சார். நம்ம கான்ஸ்டபிள் கஷ்கரின் மகன்.”

அதைக் கேட்டதும், அவன் சின்னப் பையன் எனச் சிரித்துக்கொண்டே கிளம்பிவிட்டார் லிகா. இந்த நிகழ்வையே சில தினங்களில் மறந்துவிட்டார்கள் இருவரும். பதான்களின் குற்றங்கள் தொடர்ந்தன.

ஒரு நாள் இரவு வழக்கம்போல ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார் இன்ஸ்பெக்டர் லிகா. தீடீரென ஒரு அலறல். சத்தம் வந்த சில நொடிகளில், இருளிலிருந்து ஒருவன் ஜீப்பின் வெளிச்சப் புள்ளிகளை நோக்கி அலறியபடி ஓடி வந்தான். உடலெங்கும் ரத்தம். முகம் நீல நிறமாக ஆங்காங்கே கதுப்பியிருந்தது. கன்னங்கள் வீங்கி, ரத்தம் ஒழுகும் வாயுடன் உதவிக்குக் கதறினான் அவன். காவல் வாகனத்திலிருந்து இறங்கிப் பார்த்தார் லிகா. அவன் பதான் கேங்கில் முக்கியமானவன். காவல் நிலையத்தைத் தாக்கியவர்களில் ஒருவன்.

இவனை இப்படி அடிக்கும் துணிச்சல்காரன் யாராக இருக்கும் என யோசித்துப் பார்த்தார். பிடிபடவில்லை

அவர் பின்னால் இருளில் ஒரு நிழல் உருவம் தெரிந்தது. “ஹே சாலா யார்ரா நீ?” என அதிகாரமாகக் கர்ஜித்தார் லிகா.

அவர் கேட்பதற்கும் ஒரு கனமான இரும்புக் குழல், பதானின் முதுகைத் தாக்கி அவனைக் கீழே வீழ்த்துவதற்கும் நேரம் துல்லியமாக இருந்தது! நிமிர்ந்து பார்த்தார் லிகா! ரிப்போர்ட்டர் இஃபால் சொன்னது அவர் நினைவில் வந்தது.

“இரும்பை இரும்பால்தான் அடிக்க வேண்டும் சாஹிப்…”

(நாளைக் காலை தொடரும்…)

நள்ளிரவில் பிறந்த சாம்ராஜ்ஜியக் கனவு!

வெற்றி பெற்ற திட்டமும் தவறிய இலக்கும்!

மாஃபியா உலகை வியப்பில் ஆழ்த்திய சிறுவன்!

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon