மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

25 ஆண்டுகளின் கனவு அணி எது?

25 ஆண்டுகளின்  கனவு அணி எது?

ஈஎஸ்பிஎன்-கிரிக் இன்ஃபோ இணையதளம், கடந்த 25 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டைக் கணக்கில்கொண்டு சிறந்த கனவு டெஸ்ட் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

ஈஎஸ்பிஎன்-கிரிக்இன்ஃபோ இணையதளம், உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 25 வருடங்களில், அதாவது மார்ச் 1, 1993 முதல் டிசம்பர் 31, 2017 வரை ஆடிய வீரர்களின் ஆட்டத்தை வைத்து 11 பேர் கொண்ட உலக கனவு டெஸ்ட் அணியைத் தேர்வு செய்துள்ளது.

இயன் சாப்பல், சஞ்சய் மஞ்சுரேக்கர், ஜான் ரைட், டேவ் வாட்மோர், மார்க் நிகோலஸ் போன்றோரைக் கொண்ட குழு இந்தக் கனவு அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இதில் துவக்க வீரர்களாக, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடனும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே புது முகம் கொடுத்த இந்தியாவின் அதிரடி மன்னன் சேவாக்கும் தேர்வாகியுள்ளனர்.

அடுத்ததாக, ஆஸ்திரேலியாவின் வெற்றிகரமான ஒரு கேப்டனாக வலம்வந்த ரிக்கி பாண்டிங் இடம்பெற்றுள்ளார். நான்காவது இடத்தில் உலக கிரிக்கெட்டின் இந்திய முகமான சச்சின் டெண்டுல்கர் இடம்பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, டெஸ்ட்டில் 400 ரன் அடித்துள்ள ஒரே வீரரான வெஸ்ட் இண்டீஸின் பிரைன் லாரா இடம்பெற்றுள்ளார்.

ஆறாவது வீரராக, தென் ஆப்பிரிக்காவின் ஆல் ரவுண்டர் ஜாக் காலிஸ் மற்றும் ஏழாவதாக ஆஸ்திரேலியாவின் ஓர் ஆகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் இடம்பிடித்திருக்கின்றனர்.

பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை, பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், ஆஸ்திரேலியாவின் சுழல் மன்னன் ஷேன் வார்ன், ஆஸ்திரேலியாவின் க்லென் மெக்ராத் , இலங்கையின் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இடம்பிடித்துள்ளனர்.

இந்தக் கனவு அணிக்குக் கேப்டனாக ஷேர்ன் வார்னைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

ராகுல் திராவிட், குமார் சங்கக்காரா, அலெஸ்டர் குக் ஆகியோர் இடம்பெறாதது வியப்பளிக்கிறது என்றாலும், 11 பேர் மட்டுமே என்று வரும்போது முக்கியமான சிலர் விடுபடுவது தவிர்க்க இயலாதது என்பதால் இந்தத் தேர்வில் குறைகாண்பதற்கில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon