மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

நெடுஞ்சாலை ஊழல்: நீதிமன்றத்தை நாடுவோம்!

நெடுஞ்சாலை ஊழல்: நீதிமன்றத்தை நாடுவோம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று (ஜூன் 13) முக்கியமான புகார் ஒன்றைக் கொடுத்தார். இந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடப் போவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பொறுப்பு வகிக்கும் நெடுஞ்சாலைத் துறையில், தன் பதவியைப் பயன்படுத்தி சம்பந்திகளுக்கும் பினாமிகளுக்கும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் பந்தி வைப்பதைப்போல, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களைக் கொடுத்திருக்கிறார் என்றும் வேலையின் மதிப்பீடுகளை எப்படி செயற்கையாக எவ்வித அடிப்படையுமின்றி உயர்த்தியிருக்கிறார் என்றும், தன் சம்பந்தி மற்றும் மகனின் உறவினர்களுக்கும் அவர்கள் பங்குதாரராக உள்ள கம்பெனிகளுக்கும் எப்படி டெண்டர் வழங்கியிருக்கிறார் என்பதையும் விரிவாக விளக்கி, மாநில விஜிலென்ஸ் கமிஷனருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. புகார் கொடுத்திருக்கிறார்.

ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் ஆர்.எஸ்.பாரதி, துணை முதல்வர் ஓ.பன்னீர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுத்த புகாரின் மீதே இன்னும் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில் முதலமைச்சர் மீது கொடுத்திருக்கும் இந்தப் புகாரை ஏற்கெனவே தினகரன் அணியின் சட்டமன்ற உறுப்பினர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் தெரிவித்த நிலையில், தமிழக முதல்வர் மீதான புகாரை அவரின் கீழ் இயங்கும் லஞ்ச ஒழிப்புத் துறை எப்படி விசாரிக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது

இதுகுறித்து நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஸ்டாலின், “நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகள் என்று கருதப்பட்ட பலரும் இந்த டெண்டர் முறைகேடுகளை தட்டிக்கேட்கத் திராணி இல்லாமல், தங்கள் பதவிகளைக் காப்பாற்றி அந்த இடத்திலேயே நீடிப்பதற்காக அமைச்சர்களின் அத்துமீறல்களுக்குப் பச்சைக் கொடி காட்டும் அவல நிலை ஏற்பட்டிருப்பதும், சில துறைகளில் அதிகாரிகளே மோசடிகளுக்குத் துணையாக இருந்து ஊழலைப் பங்கு போட்டுக்கொள்வதும், இவற்றின் காரணமாக நிர்வாகம் எவ்வளவு வேகமாகப் படுபாதாளம் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதும் மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழகத்தின் கஜானா மக்களுக்குச் செயல்படுகிறதோ இல்லையோ, அதிமுக அரசின் ஊழலுக்குப் பயன்படுத்தப்பட்டு பகல் கொள்ளை அநியாயமாக அரங்கேறி வருகிறது.

அமைச்சர்கள் ஊழல்களைச் சுதந்திரமாக செய்வதற்காகவே, லஞ்ச வேட்டையை ஊக்குவிப்பதற்காகவே, லஞ்ச ஒழிப்பு தடுப்புத் துறையில் டி.ஜி.பி. அந்தஸ்தில் இயக்குநரை நியமிக்காமல் இருக்கிறது அதிமுக அரசு. அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் ஊழல்களை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக் ஆயுக்தா அமைப்பை உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் இன்னும் உருவாக்காமல் காலம் கடத்தி வருகிறது அதிமுக அரசு.

ஆகவே, அனைத்துத் துறைகளிலும் அதிமுக ஆட்சியின் ஏழாண்டு காலத்திலும் - குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு நாள்தோறும் நடைபெற்றுவரும் இமாலய டெண்டர் ஊழல் மற்றும் அமைச்சர்களின் டெண்டர் ஊழல்களையும் விசாரிக்க லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை தானாகவே முன் வர வேண்டும். லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை தயங்கினால் நீதிமன்றத்தை நாட திமுக தயங்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.

குட்கா விவகாரத்தில் எப்படி நீதிமன்றத்தை நாடி வெற்றி பெற்றோமோ அதேபோல இந்த விவகாரத்தில் முதல்வரை நிச்சயம் கூண்டில் ஏற்றுவோம் என்கிறார்கள் திமுகவினர்.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon