மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

கடந்த வாரம் நாக்பூர்; இந்த வாரம் இப்தார்!

கடந்த வாரம் நாக்பூர்; இந்த வாரம் இப்தார்!

கடந்த வாரம் (ஜூன் 7) ஆம் தேதி நாக்பூரில் ஆர்எஸ்எஸ் விழாவில் கலந்துகொண்ட முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்த வாரம் (ஜூன் 13) டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்பாடு செய்திருந்த இப்தார் விருந்தில் கலந்துகொண்டது தேசிய அரசியலில் கவனக் குவிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காங்கிரஸில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் பிரணாப் முகர்ஜியை கடந்த 2012ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியது காங்கிரஸ். அவர் குடியரசுத் தலைவராக இருந்து 2017ஆம் ஆண்டு, அப்பதவியில் இருந்து விடைபெற்றார். இந்தப் பின்னணியில் கட்சி சாராத நபராக பிரணாப் கருதப்பட்டாலும், காங்கிரஸ் பாரம்பரியமே அவரது அரசியல் அடையாளமாக இருந்தது. இந்த நிலையில், கடந்த ஜூன் 7ஆம் தேதி ஆர்எஸ்எஸ் தலைமையகமான நாக்பூரில் நடந்த அந்த இயக்கத்தின் வருடாந்திர நிகழ்வுக்கு பிரணாப் முகர்ஜி அழைக்கப்பட்டார். இந்த அழைப்பே காங்கிரஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த அழைப்பை பிரணாப் ஏற்றுக்கொண்டது காங்கிரஸை மேலும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

காங்கிரஸ் தலைவர்கள் பலரது வேண்டுகோளை நிராகரித்து ஆர்எஸ்எஸ் விழாவில் கலந்துகொண்டார் பிரணாப் முகர்ஜி. இந்தியாவின் ஆன்மா அதன் பன்முகத் தன்மையில்தான் இருக்கிறது என்று பேசிவிட்டு வந்தார். ஆனாலும் பிரணாப் மீது காங்கிரஸுக்கு வருத்தம் தொடர்ந்தது. இந்த நிலையில், ‘மோடியின் செல்வாக்கு குறைவதால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை பாஜக பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயல்கிறது’ என்று சிவசேனா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டது. ராஜீவ் காந்தி குடும்பத்தால் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார் என்ற ஒற்றைக் காரணமே இந்த யூகத்துக்கு வலிமை சேர்த்தது.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 13) டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்பாடு செய்திருந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டதோடு, ராகுல் காந்திக்கு அருகே அமர்ந்திருந்தார். இந்தக் காட்சி தேசிய அரசியல் அரங்கில் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஆர்எஸ்எஸ் விழாவுக்குச் சென்ற பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் வெறுத்து ஒதுக்கும் என்று யூகங்கள் நிலவிவந்த நிலையில்... அப்படி ஒதுக்குவதன் மூலம் பாஜகவுக்கே அரசியல் லாபம் ஏற்படும் என்று கருதினார் ராகுல் காந்தி. மேலும் பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் கட்சி முழு மரியாதையைத் தரும் என்பதை இந்த நேரத்தில் நிரூபிக்கவும் விரும்பினார் ராகுல். அதனால்தான் இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு பிரணாப் முகர்ஜியை அழைத்ததோடு அவருக்குச் சிறப்பான வரவேற்பையும் முக்கியத்துவத்தையும் கொடுத்தார் ராகுல். பிரணாப் முகர்ஜி என்ற அரை நூற்றாண்டு மதச் சார்பற்ற அரசியல் அடையாளத்தை மதச்சார்பு சக்திகள் தங்கள் குறுகிய லாபத்துக்குப் பயன்படுத்த முனைவதைத் தடுக்க ராகுல் காந்தியின் இந்த அழைப்பு பயன்பட்டிருக்கிறது” என்கிறார்கள் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்.

பிரணாப் முகர்ஜியோடு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில், முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

இவர்களோடு மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, லோக் தந்திரிக் ஜனதாதளக் கட்சித் தலைவர் சரத் யாதவ், திமுக சார்பில் கனிமொழி எம்.பி, திருணமூல் காங்கிரஸ் தினேஷ் திரிவேதி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சதீஷ் சந்திர மிஸ்ரா, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. திரிபாதி, ஜார்கண்ட் முத்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளும் ராகுல் காந்தியின் இப்தார் விருந்தில் கலந்துகொண்டனர்.

இதுபற்றி தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கும் ராகுல், “நல்ல உணவு, நட்பான முகங்கள், சிறப்பான உரையாடல்கள் என்று மறக்க முடியாத இப்தார் விருந்தாக இன்றைய இப்தார் அமைந்திருக்கிறது. பிரணாப் முகர்ஜி, பிரதிபா பாட்டில் ஆகிய இரு முன்னாள் குடியரசுத் தலைவர்களின் வருகை நம்மைக் கௌரவப்படுத்தியுள்ளது. மேலும் முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் நோக்கர்களும் கலந்துகொண்டு நம்மைப் பெருமைப்படுத்தியுள்ளார்கள்” என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

நாக்பூர் ஆர்எஸ்எஸ் விழாவில் கலந்துகொண்ட பிரணாப் முகர்ஜியை இப்தார் விருந்துக்கு அழைத்துக் கௌரவித்ததன் மூலம் செம்மையான அரசியல் காய் நகர்த்தியிருக்கிறார் ராகுல் என்கிறார்கள் தேசிய அரசியல் நோக்கர்கள்.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon