மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

ரஜினிகாந்துடன் இணைந்த முனிஷ்காந்த்

ரஜினிகாந்துடன் இணைந்த முனிஷ்காந்த்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் ரஜினியை வைத்து இயக்கிவரும் புதிய படத்தில் நடிகர் முனிஷ்காந்த் இணைந்துள்ளார்.

ரஜினிகாந்த் காலா திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூன் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்தில் சிம்ரன், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர். ஆக்ஷன் டிராமாவாக உருவாகிவரும் இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துவருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இவர்களுடன் நகைச்சுவை நடிகர் முனிஷ்காந்தும் இணைந்துள்ளார். ராமதாஸ் என்கிற பெயரோடு கடந்த 2009ஆம் ஆண்டு நடிகர் விக்னேஷ் நடித்த ஈசா படத்தில் துணை நடிகராக அறிமுகமான முனிஷ்காந்த் தன்னுடைய வித்தியாசமான காமெடியால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.

மேலும் இவர் கடல், சூது கவ்வும், நேரம் ஆகிய பல படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய நடிப்பைத் தனித்துவமாக எடுத்துக்காட்டியது, இவர் முனிஷ்காந்த் என்ற பெயரில் நடித்த முண்டாசுப்பட்டி திரைப்படம்தான். இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமின்றி இவருடைய நடிப்பிற்கு ரசிகர்களிடம் நல்ல விமர்சனமும் கிடைத்தது. இந்தப் படத்துக்குப் பிறகு ராமதாஸ் முனிஷ்காந்த் ஆனார்.

முதன்முறையாக கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி அமைத்து அனிருத் இசையமைத்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை மூன்று மாதத்திற்குள் முடித்துவிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தில் நடித்து முடித்த பிறகு ரஜினி தனது அரசியல் பயணத்தைத் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஜினி நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அடுத்த ஆண்டுதான் வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon