மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

சிறப்புக் கட்டுரை: திறமைகளைத் துரத்தும் தொழில்நுட்பம்!

சிறப்புக் கட்டுரை: திறமைகளைத் துரத்தும் தொழில்நுட்பம்!

சிவா

FIFA உலகக் கோப்பை 2018

1970ஆம் ஆண்டு நடைபெற்ற FIFA கால்பந்தாட்ட உலகக் கோப்பைப் போட்டியை யாராலும் மறக்க முடியாது. கால்பந்தாட்ட ரசிகர்களையும் கடந்து, ஒட்டுமொத்த உலகத்தையும் பார்க்க வைத்தது அந்தப் போட்டி. காரணம், அதுதான் முதன்முதலாக நடைபெற்ற கால்பந்தாட்ட உலகக் கோப்பை. பணம், கனிம வளம், அணுசக்தி என எவ்வளவோ பெருமைகளைக் கொண்ட சர்வ வல்லாதிக்கம் பொருந்திய நாடுகள், பொருளாதாரம், மருத்துவம், கல்வி ஆகியவற்றில் பின்தங்கிய நாடுகளிடம் தோற்றுப்போய் வீட்டுக்குச் சென்றன. இப்போது வரையிலும் அதே நிலைதான்.

உலகின் பல நாடுகளுக்கும் அணு சக்தியினால் அச்சுறுத்தல் விடுக்கும் ரஷியா, FIFA உலகக் கோப்பைப் போட்டியைத் தனது நாட்டில் நடத்திவிட வேண்டும் என்று எவ்வளவோ சமரசங்களைச் செய்துகொண்டு, FIFA காங்கிரஸ் சொல்லும் அத்தனை நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு இன்று இரவு 8.30 மணிக்குத் தனது மண்ணில் முதல் உலகக் கோப்பைப் போட்டியை நடத்தவிருக்கிறது. அதுபோலவே, மெக்சிகோ, கனடா அணிகளுடன் இணைந்து 2026ஆம் வருடத்துக்கான கால்பந்தாட்ட உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் வாய்ப்பை அமெரிக்கா பெற்றிருக்கிறது. 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை நடத்தும் வாய்ப்பை கத்தார் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஓட்டெடுப்பில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

வருடங்கள் ஓடினாலும் கால்பந்தாட்டத்துக்கான மவுசு எப்போதும் குறைவதில்லை. அதிக பணம் கொழிக்கும் விளையாட்டுகளில் ஒன்றாக கால்பந்தாட்டம் இருந்தாலும், அதில் இருக்கும் விளையாட்டு உணர்வு, இதற்கு முன்பு ஆதிக்கம் செலுத்திய ஜாம்பாவான்கள் சொல்லிச் சென்றவை. அதனையெல்லாம் ஒரு காலத்திலும் தற்போதைய வீரர்கள் மறக்கக்கூடாது என்பதை உணர்த்த வேண்டும் என நினைத்திருக்க வேண்டும். அதனால்தான் 1970ஆம் ஆண்டு மெக்சிகோ நடத்திய உலகக் கோப்பைப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்தின் டிசைனிலேயே 2018ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கோப்பையில் பயன்படுத்தும் பந்தையும் டிசைன் செய்திருக்கிறார்கள்.

‘Telstar 18’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் பந்து 1970இல் விளையாடப்பட்ட Telstar பந்தின் நினைவாக இந்த உலகக் கோப்பைப் போட்டியில் வடிவமைக்கப்பட்டிருப்பதன் காரணம் தொழில்நுட்பம்.

1962ஆம் ஆண்டில் அப்போதைய பெல் டெலிகாம் நிறுவனத்தின் மூலம் (தற்போதைய AT&T) அனுப்பப்பட்ட முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் Telstar. அந்த சமயத்தில், மனித இனத்தின் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்பட்டதால், அந்த செயற்கைக்கோளின் பெயரை கால்பந்தாட்ட உலகக் கோப்பைப் போட்டியின் பந்துக்கு வைத்தது அடிடாஸ் (Adidas) நிறுவனம். 48 ஆண்டுகள் கடந்த பின் நடைபெறும் இவ்வருடப் போட்டிகளில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகமாக இருப்பதால், Telstar பந்தினை மீள் உருவாக்கம் செய்திருக்கிறது அடிடாஸ்.

அடிடாஸ் நிறுவனத்தின் பந்து முதன்முறையாகக் கால்பந்தாட்ட உலகக் கோப்பைப் போட்டிக்குப் பயன்படுத்தப்பட்டது 1970ஆம் ஆண்டில் என்பதால், அதனை மிகப்பெரிய அளவில் கொண்டுசெல்ல Telstar (Television+Star) எனப் பெயரிடப்பட்டது. அந்தக் காலத்தில் பெரும்பாலும் கறுப்பு, வெள்ளை டிவிக்களாக இருந்ததால், போட்டிகளைத் தொலைக்காட்சிகளில் பார்ப்பவர்களுக்கு வெள்ளை நிறப் பந்து எங்கே இருக்கும் என்பதே தெரியாமல் போனது. இந்த சங்கடத்தைத் தீர்க்க, முதல்முறையாகக் கறுப்பு வெள்ளை சதுரங்களில் அடிடாஸ் கால்பந்தாட்டப் பந்தை வடிவமைத்தது. பின்னர், அதுவே கால்பந்தாட்டப் பந்துக்கான அடையாளமாக மாறிப்போனது. இதுபோன்ற பெருமைகளைக் கொண்ட அடிடாஸ் நிறுவனத்தின் Telstar பந்தின் இரண்டாவது வெர்ஷன் Telstar 18.

Telstar 18 பந்தில் NFC எனப்படும் Near Field Communication தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடிடாஸ் இதுபோன்ற தொழில்நுட்பத்தைப் பந்துகளில் வைப்பது புதிதல்ல. ஆனால், உலகக் கோப்பைப் போட்டியில் இந்தப் பந்துகள் அனுமதிக்கப்படுவதுதான் புதியது. கால்பந்தாட்ட அணிகள் பயன்படுத்தும் பயிற்சிப் பந்துகளில், அவை உதைக்கப்படும் சக்தி, பந்து செல்லும் வேகம் ஆகியவற்றைக் கணிப்பதற்கான தொழில்நுட்பங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், உலகக் கோப்பைப் போட்டியில் பயன்படுத்தும் பந்துகள் இப்படிப்பட்ட தகவல்களைத் தராது. அப்படிக் கொடுக்கும்படி வைத்திருந்தால், கோல் அடிக்கப் பந்தை உதைத்து, கோல் கீப்பர் அதனைப் பிடித்துவிட்டால், அவரிடமிருந்து பந்தினைப் பிடுங்கி எவ்வளவு வேகத்தில் பந்தை அடித்தோம் என ஒவ்வொரு வீரரும் பார்க்க முனைவார்கள் அல்லவா? நகைச்சுவைக்காகச் சொன்னாலும் கோல்கீப்பர் - கோல் அடிக்கும் வீரர் ஆகிய இருவருக்கிடையேயான போட்டியை இந்த பந்து அதிகரிக்கும்.

காற்றில் அதன் பாதை மாறக் கூடாது என்பதனை மனதில் வைத்து Telstar 18 உருவாக்கப்பட்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் பயன்படுத்தப்பட்ட Brazuca பந்து, 0 டிகிரியில் உதைக்கப்படும்போது எவ்வித அசைவுமின்றி சென்று திடீரென ஏதாவது ஒரு பக்கத்தில் காற்றின் திசை, வேகத்துக்கேற்ப விழுந்தது. இது Knuckle Ball எனப்படும். Telstar 18 பந்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 6 பேனல்களும் ஒன்றுக்கொன்று மிக இறுக்கமாக ஒட்டப்பட்டவை. பந்தின் குறிப்பிட்ட பகுதியுடன் நின்றுவிடாமல் கிட்டத்தட்ட 180 டிகிரிக்கு ஆறு பேனல்களும் சுற்றி இருப்பதால், காற்றினால் பந்தின் திசையில் ஏற்படும் மாற்றம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால், வழக்கமாக உதைப்பதைவிட அதிக வேகத்தில் Telstar 18 பந்தினை உதைக்க வேண்டும். Brazuca பந்து 90 கிலோமீட்டர் வேகத்தில் உதைக்கப்பட்டபோது கடந்த தூரத்தில், 10 சதவிகிதம் தூரத்தை Telstar 18 குறைவாகவே கடக்கும். எனவே, தூரத்திலிருந்து எவ்வளவு வேகமாக உதைக்கப்பட்டாலும் பந்தின் வேகம் கோல்கீப்பரிடம் வரும்போது குறைந்துவிடும். ஆனால், குறைந்த தூரத்தில் சரியான வேகத்தில் உதைக்கப்படும்போது இவற்றைத் தடுக்க கோல்கீப்பர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும். இதனால், உலகக் கோப்பைப் போட்டியில் பெரிதாக நினைக்கப்படும் அணிகள் தோல்வியடையும் சூழல்கள் ஏற்பட்டால் ஆச்சரியப்பட வேண்டாம்.

Telstar 18 பந்து கால்பந்தாட்டத்தின் தற்போதைய சூழலுக்கு மிகவும் தேவை. அனுபவம் மிகுந்த, பந்தைத் திறம்படக் கையாளத் தெரிந்த சீனியர் வீரர்கள் தங்களது சக்தியை வீணடிக்காமல் எங்கிருந்தாலும் சரியாக கோல் அடித்து ஆட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வது குறையும். அதே சமயம், தனி நபரை நம்பி இல்லாமல், ஒவ்வொரு கால்பந்தாட்ட அணியிலுள்ள 11 பேரும் சேர்ந்து ஒரே உடலாக இயங்கக்கூடிய வாய்ப்பையும் Telstar 18 அதிகரிக்கச்செய்யும் என நம்பலாம்.

ஆக்டோபஸ் வைத்து போட்டியின் முடிவைத் தீர்மானித்த காலமெல்லாம் சென்று, ஒவ்வொரு கால்பந்தாட்ட வீரரின் திறமையையும், அணிகளின் கூட்டு முயற்சியையும் முன்னேற்றும் வகையில் கால்பந்தாட்டம் மாறிவருவது ஆரோக்கியமானது. இன்று (ஜூன் 14) இரவு 8.30 மணிக்கு, 2018ஆம் ஆண்டின் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி தொடங்குகிறது. ரஷியாவும், சவுதி அரேபியாவும் மோதும் இந்தப்போட்டி பல கள விவரங்களை நமக்குச் சொல்லும்.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon