மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

அமைச்சரை நீக்க வேண்டும்: பால் முகவர்கள் சங்கம்!

அமைச்சரை நீக்க வேண்டும்: பால் முகவர்கள் சங்கம்!

பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் ஆவின் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பாலில் உயிருக்குத் தீங்கிழைக்கும் ரசாயனங்களைக் கலப்படம் செய்வதாகவும், தனியார் பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்குப் புற்றுநோய் வருவதாகவும் ஒரு கருத்தை தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்குத் தனியார் பால் நிறுவனங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தபோது, “தனியார் நிறுவன பாலில் ரசாயன கலப்படம் இல்லை என்று நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார்” என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஹட்சன், டோட்லா போன்ற தனியார் பால் நிறுவனங்கள், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. அந்த வழக்குகள் தற்போதும் நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் தனியார் பால் நிறுவனங்களின் பாலில் உயிருக்குத் தீங்கிழைக்கும் ரசாயனங்களின் கலப்படம் இல்லை என்பதற்கான ஆதாரங்களைத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளியிட்டது.

இதையடுத்து, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மனு அனுப்பியது. இந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படாமல் உள்ள நிலையில், நேற்று (ஜூன் 13) தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் மீதான புகார் என்பதால் ஒப்புகைச் சீட்டு வழங்கத் தனிப்பிரிவு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதையடுத்து, தலைமைச் செயலாளரிடம் மனு அளிக்க அவர்கள் முடிவு செய்தனர். சட்டமன்ற நடவடிக்கைகளில் தலைமைச் செயலாளர் கலந்து கொண்டிருந்ததால் மனுவைத் தபால் பிரிவில் அவர்கள் வழங்கியுள்ளனர். மனுவில், “ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியதைப் போன்று தனியார் பால் நிறுவனங்களின் பாலில் உயிருக்குத் தீங்கிழைக்கும் ரசாயனங்கள் எதுவும் கலப்படம் செய்யப்படவில்லை என்பது உறுதியாவதோடு அவரது குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதும் நிரூபணமாகிறது. எனவே, அவரை பால்வளத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கிவீட்டு அப்பதவிக்குத் தகுதியான, பொறுப்பான, திறமையான ஒருவரை நியமிக்கத் தமிழக முதல்வரை வலியுறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி, “மத்திய அரசின் உணவு தரக் கட்டுப்பாடு ஆய்வகங்களின் தகவல்கள்படி உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ரசாயனங்கள் எதுவும் பாலில் கலக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தவறான தகவல் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon