மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

விலை மதிப்பில்லாத ரத்தம்!

விலை மதிப்பில்லாத ரத்தம்!

தினப் பெட்டகம் – 10 (14.06.2018)

மனித உடலுக்கு ரத்தம் மிக மிக அத்தியாவசியமான திரவம். சிகப்பு நிறத்தில் இருக்கும் மனித ரத்தம்தான் ஆக்ஸிஜனை உடல் முழுதும் கொண்டு செல்கிறது. ஆனால், ரத்தத்தின் பயன்பாடு அவ்வளவுதானா? பார்க்கலாம்:

1. மனித உடல் எடையில் ஏறத்தாழ 7% ரத்தத்தினுடையது.

2. ரத்தம் சிவப்பாக இருப்பதற்கான காரணம், ஹீமோகுளோபின் (HAEMOGLOBIN). சிவப்பணுக்களைத் தவிர்த்து, வெள்ளை அணுக்கள், Blood Plasma எனப்படும் மஞ்சள் நிற திரவம் ஆகியவை இருக்கின்றன. இந்த பிளாஸ்மாவில் 90% தண்ணீர், ஹார்மோன்கள், குளுக்கோஸ், புரதம், வாயு போன்ற மற்ற பொருட்களும் இருக்கின்றன.

3. ABO systemன் அடிப்படையில் A, B, AB, O ஆகிய ரத்தப் பிரிவுகள்தான் நமக்குத் தெரியும். ஆனால், அவற்றையும் சேர்த்து 30 வெவ்வேறு ரத்தப் பிரிவுகள் இருக்கின்றன.

4. ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரத்த நாளங்களின் நீளம் 60,000 மைல்.

5. சராசரி ஆணின் உடலில் 5.6 லிட்டர் ரத்தமும், பெண் உடலில் 4.5 லிட்டர் ரத்தமும் இருக்கிறது.

6. புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலில் ஒரு கப் அளவிற்குத்தான் ரத்தம் இருக்குமாம்.

7. மனித உடலில் ரத்தம் இல்லாத ஒரே பாகம் கண்ணில் இருக்கும் கார்னியா பகுதி. இதற்கான காரணம், கார்னியாவால் காற்றிலிருந்து நேரடியாக ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்ள முடியுமாம்.

8. ஒவ்வொரு நாளும் நம் சிறுநீரகத்தால் 400 காலன் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

9. ஒவ்வொரு விநாடியும் மனித உடலில் 2 மில்லியன் சிவப்பணுக்கள் இறந்து போகின்றன; அதை ஈடு செய்ய எலும்பு மஜ்ஜையில் ஒவ்வொரு விநாடியிலும் 2 மில்லியன் சிவப்பணுக்கள் உருவாகின்றன. சராசரியாக சிவப்பணுக்களின் ஆயுட்காலம், 120 நாள்.

10. மனித உடலில் இதயத்தை மாற்றி விடலாம், ஆனால் ரத்தத்திற்கான மாற்று இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், நம் ரத்தம் மிகவும் விலை மதிப்பில்லாதது.

இன்று உலக ரத்த தான தினம். இந்த அளவுக்கு விலை மதிப்பில்லாத ரத்தத்தை தானம் செய்வது நம் வாழ்தலுக்கு அர்த்தத்தைத் தரும். முடிந்தவர்கள் தானம் செய்யுங்கள்.

- ஆஸிஃபா

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon