மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

மோடியைக் குற்றம்சாட்டும் வீடியோகான்!

மோடியைக் குற்றம்சாட்டும் வீடியோகான்!

தங்களது நிறுவனத்துக்கு ரூ.39,000 கோடி வரையில் கடன் சுமை ஏற்பட்டதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், உச்ச நீதிமன்றமும், பிரேசில் அரசும்தான் காரணம் என்று வீடியோகான் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

நுகர்வோர் மின்சாதனப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் வீடியோகான் நிறுவனம் பெருத்த கடன் சுமையில் சிக்கியுள்ளது. மேலும், ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயலதிகாரி சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சருடன் இணைந்து பங்குப் பரிமாற்றச் சர்ச்சையிலும் இந்நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் சிக்கியுள்ளார். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்துள்ள நிலையில் சிபிஐ விசாரணை வளையத்தில் இவர் இருக்கிறார். இந்த நிலையில் வீடியோகான் நிறுவனம் பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கை ஒன்றில் தங்களது இழப்புக்குக் காரணம் பிரதமர் மோடிதான் என்று புகார் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் பண மதிப்பழிப்பு அறிவிப்பு பிரதமர் மோடியால் வெளியிடப்பட்டதால், எதிர் மின்வாய் கதிர் குழாய் தொலைக்காட்சிகள் (கேத்தோடு ரே டியூப் தொலைக்காட்சிகள்) விற்பனை முடங்கியதாகவும், இதனால் அத்தொழிலையே இழுத்து மூடும் சூழல் ஏற்பட்டதாகவும் கூறும் அந்நிறுவனம், மோடியே இதற்குப் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி உரிமம் ரத்து செய்யப்பட்டதால் வீடியோகான் நிறுவனத்தின் தொலைத் தொடர்புத் தொழிலும் முடங்கியதால் உச்ச நீதிமன்றத்தையும் தனது இழப்புகளுக்குக் காரணமாகக் கூறுகிறது. பிரேசில் நாட்டில் வீடியோகான் நிறுவனத்தின் எரிவாயு மற்றும் எண்ணெய் தொழிலுக்கு விதிக்கப்பட்ட தடையால் ஏற்பட்ட இழப்புகளுக்கு பிரேசில் அரசை இந்நிறுவனம் காரணமாகக் கூறுகிறது.

வீடியோகான் நிறுவனத்தின் சந்தைப் பங்குகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 96 சதவிகிதத்துக்கும் மேல் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon