மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

ராகிங் செய்வதை 33% மாணவர்கள் விரும்புகின்றனர்!

ராகிங் செய்வதை 33% மாணவர்கள் விரும்புகின்றனர்!

கல்லூரிகளில் ராகிங் செய்வதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் ராகிங் நடந்து கொண்டுதானிருக்கின்றது.

2018ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி கொல்கத்தாவில் செயின்ட் பவுல் கல்லுரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவரை முன்னாள் மாணவர்கள் சேர்ந்து ராகிங் என்ற பெயரில் சித்திரவதை செய்துள்ளனர். இதனால் அந்த மாணவன் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதுபோன்று பல சம்பவங்கள் நடக்கின்றன.

இந்த நிலையில், ராகிங் புகார்கள் குறித்த புள்ளி விவரங்கள் லோக் சபாவில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2013 - 2017) 3,022 ராகிங் குறித்த புகார்கள் வந்துள்ளன. 2013ஆம் ஆண்டில் 640 ஆக இருந்த ராகிங் புகார்கள் 2017ஆம் ஆண்டில் 901 ஆக உயர்ந்துள்ளன. அதாவது 75 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகளவில் ராகிங் குறித்த புகார்கள் பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசம் (461), மத்தியப் பிரதேசம் (357), மேற்கு வங்கம் (337), ஒடிசா (207), பிகார் (170).

2015ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 2018 மார்ச் 27ஆம் தேதி வரை 2,041 ராகிங் குறித்த புகார்கள் பெறப்பட்டன. 338 புகார்கள் தொடர்பாக சஸ்பெண்ட் உள்ளிட்ட 871 புகார்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

அதனால் 2009ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு சில வரைமுறைகளை அறிமுகப்படுத்தியது. அதில், ராகிங்கில் ஈடுபடும் மாணவர்களிடம் சஸ்பெண்ட், சம்பந்தப்பட்ட மாணவர்களை வெளியேற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றன.

கடந்த ஆண்டு இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களில் ராகிங்கில் ஈடுபட்ட 22 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். புவனேஸ்வரில் கடந்த ஆண்டு ராகிங்கில் ஈடுபட்ட இரண்டு இன்ஜினீயரிங் மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

உச்ச நீதிமன்றம் கட்டாயப்படுத்திய ராகிங் குறித்த உளவியல் - சமூக ஆய்வில் 40 சதவிகித மாணவர்கள் பங்கேற்றனர். அதில், ராகிங் செய்வது நிஜ வாழ்க்கைக்குத் தயார்படுத்துவதாக 36 சதவிகித மாணவர்கள் நினைக்கின்றனர். ராகிங் செய்வதை 33 சதவிகித மாணவர்கள் சந்தோஷமாக நினைக்கின்றனர். 45 சதவிகித மாணவர்கள் ஆரம்பத்தில் அவமானமாகக் கருதினாலும், கடைசியில் நல்லதுதான் என்று நினைக்கின்றனர் என மாணவர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

ராகிங் சம்பந்தமாக 187 மாணவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டன. அதில் 40 சதவிகித மாணவர்கள் கல்லூரியில் மாணவர்களை நண்பர்களாக்குவதற்கு ராகிங் உதவுகிறது என்று கூறுகின்றனர். 28 சதவிகித மாணவர்கள் கல்லூரி காலத்தின் சந்தோஷம் எனக் கூறுகின்றனர். ராகிங் செய்வது, படிப்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என 30 சதவிகித மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

84 சதவிகித மாணவர்கள் ராகிங் குறித்து புகார் அளித்ததில்லை. ராகிங் செய்வது குறித்து புகார் அளித்தாலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களா எனத் தெரியவில்லை என 41 சதவிகித மாணவர்கள் சந்தேகப்படுகின்றனர்.

ஆனால், இது குறித்தான ஆய்வில், ராகிங் செய்வது மாணவர்களின் நீண்ட கால உளவியல் பாதிப்பு மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. ராகிங்கில் பாதிக்கப்படாதவர்களைக் காட்டிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மன ரீதியான பாதிப்பு, மன அழுத்தம், கோபம், தற்கொலை செய்ய நினைத்தல், தற்கொலை முயற்சி மற்றும் தன்னைப் பற்றிக் குறைந்த மதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon