மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

சிறப்புக் கட்டுரை: தமிழகத்தில் உடலுறுப்பு தானத்தில் முறைகேடு?

சிறப்புக் கட்டுரை: தமிழகத்தில் உடலுறுப்பு தானத்தில் முறைகேடு?

ர.ரஞ்சிதா

தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலிலிருந்து எடுக்கப்படும் இதயம், அதற்காகக் காத்திருக்கும் இந்திய நோயாளிகளுக்கு வழங்கப்படாமல், வெளிநாட்டினருக்குப் பொருத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு (2017) தமிழகத்தில் நடைபெற்ற மொத்த இதய மாற்று அறுவை சிகிச்சையில் 25 சதவிகிதம் பேர் வெளிநாட்டினர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதே ஆண்டில் 33 சதவிகித வெளிநாட்டினருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சமீபத்தில் நடைபெற்ற 4 இதய மாற்று அறுவை சிகிச்சையில், 3 வெளிநாட்டினருக்கு இதயம் பொருத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2015ஆம் ஆண்டில் 55 இந்தியர்களுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதே ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த 10 பேருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு 86 இந்தியர்களுக்கும், 23 வெளிநாட்டினருக்கும் இதயம் பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு 91 இந்தியர்களுக்கும், 31 வெளிநாட்டவருக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நடப்பாண்டில் (2018) மே மாதம் வரை 50 இந்தியர்களுக்கும், 10 வெளிநாட்டினருக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற 4 இதய மாற்று அறுவை சிகிச்சையில் 3 வெளிநாட்டவருக்கு இதயம் பொருத்தப்பட்டது.

இந்தத் தகவல்களை உறுப்பு மாற்று - திசு மாற்று அறுவை சிகிச்சைக்கான தேசிய அமைப்பின் இயக்குநர் பேராசிரியர் விமல் பண்டாரி கூறியுள்ளதாகச் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரவீந்திரநாத் தெரிவிக்கிறார்.

சட்டமும் நடைமுறையும்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 5,310 இந்தியர்களும், 53 வெளிநாட்டினரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். விதிமுறைகளின்படி, உடலுறுப்பு தானத்தில் இந்தியர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இரண்டாவதாக வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இவர்கள் இருவரும் இல்லாதபட்சத்தில் மட்டுமே வெளிநாட்டினருக்கு உறுப்பு தானம் வழங்கிடவேண்டும்.

ஆனால், இந்த விதிமுறை கடைப்பிடிக்கப்படவில்லை என்று தேசிய உறுப்பு மாற்று அமைப்பின் இயக்குநர் விமல் பண்டாரி கூறியுள்ளார். இந்தியர்களின் இதயம், இந்தியர்களுக்குப் பொருந்தாதது வருத்தம் அளிப்பதாகவும், காத்திருப்புப் பட்டியலில் உள்ள இந்திய ஏழை நோயாளிகளுக்குச் செல்ல வேண்டிய உறுப்புகள் முறைகேடாக வெளிநாட்டவர்களுக்குப் பொருத்தப்படுவது வருத்தமளிப்பதாகவும் அவர் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

உடலுறுப்பு தானத்தில் முறைகேடு நடப்பதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியளிப்பதாகத் தமிழகத்தில் முதன்முதலில் உடலுறுப்பு தானம் செய்த ஹிதேந்திரனின் தந்தை மருத்துவர் அசோகன் கூறுகிறார். "சமீபகாலமாக அதிக வெளிநாட்டினருக்கு உறுப்புகள் பொருத்தப்படுவதற்குக் காரணம் தனியார் மருத்துவமனைகள். அவர்கள் லாப நோக்கத்தோடு செயல்படுகிறார்களே தவிர, சேவையாகச் செய்யவில்லை. தமிழ்நாடு அரசு ஒரு விசாரணைக் குழு அமைத்து, சமீபகாலமாக வெளிநாட்டினருக்குக் கொடுக்கும் உறுப்பு தானம் குறித்து ஆடிட் செய்ய வேண்டும். அப்போதுதான் எந்தச் சூழ்நிலையில் உறுப்புகள் வழங்கப்பட்டன என்பது தெரியும்" என்கிறார் அசோகன்.

"விதிகளை மீறி வெளிநாட்டினருக்கு உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளதால், உள்ளூர் நோயாளிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளனவா, எவரேனும் உறுப்பு வழங்கப்படாததால் இறந்துள்ளனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்று முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளருமான மருத்துவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

மருத்துவச் சுற்றுலாவை ஊக்கப்படுத்துவது, மருத்துவச் சேவையையே தொழிலாக மாற்றுவது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் மருத்துவமனைகளை ஊக்கப்படுத்துவது, மருத்துவம் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டுவது போன்ற மத்திய அரசின் கொள்கைகளே இம்முறைகேடுகளுக்கு அடிப்படைக் காரணம். மத்திய அரசின் தவறான கொள்கைகள் மூலம் ஏழை இந்தியர்களின் உறுப்புகளை, பணக்கார வெளிநாட்டினர் பெற வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது என்கிறார் மருத்துவர் இரவீந்திரநாத். உரிய சட்டங்களைக் கொண்டுவந்து வெளிநாட்டு நோயாளிகள் இந்தியர்களின் உறுப்புகளைப் பெறுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று கூறும் அவர், மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு, தமிழக அரசின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பைக் குறை கூறுவது நியாயமல்ல என்றும் கூறுகிறார்.

தவறான முறையில் மூளைச் சாவு

சமீபகாலமாகத் தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டுவரும் கார்ப்பரேட் மருத்துவமனைகள் சிலவற்றில் உடலுறுப்பு தான முறைகேடுகள் நடந்துவருகின்றன என்று ஹிதேந்திரனின் தந்தை அசோகன் கூறுகிறார். “தீவிர சிகிச்சை மேற்கொண்ட பிறகும் ஒருவர் மூளைச்சாவு அடைந்தால் அவரது உறுப்புகள் தானம் செய்யப்படுவது முறையானது. ஆனால், தவறான வழியில் மூளைச்சாவை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு மருத்துவர்கள் கையில் இருக்கிறது. இப்படியும் சில மருத்துவமனைகளில் நடக்கிறது. இதனால் உறுப்பு தானத்துக்கு முன்வரும் போக்கு குறைந்துவருகிறது" என்கிறார் வேதனையுடன்.

கடந்த மாதத்தில் சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மணிகண்டனின் உடலுறுப்புகள் உறவினர்களின் ஒப்புதல் இல்லாமல் திருடப்பட்டதாக கேரள முதல்வர், தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில், முதல்கட்டமாக மருத்துவமனை நிர்வாகத்திடம் மருத்துவப் பணிகள் இயக்குநர் இன்பசேகரன் தலைமையிலான விசாரணைக் குழு விசாரணை மேற்கொண்டது. உறவினர்களின் ஒப்புதலோடுதான் உறுப்புகள் எடுக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மணிகண்டனின் உறவினர்களிடமும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில்தான் விசாரணைக் குழு தரும் அறிக்கையை வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

உடலுறுப்பு திருட்டு குறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், உறுப்பு தானத்தைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் ட்ரான்ஸ்டன் அமைப்பின் உறுப்பினர் செயலர் பதவியிலிருந்து மருத்துவர் பாலாஜி சமீபத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தியர்கள் யாரும் காத்திருப்போர் பட்டியலில் இல்லை என்பதைத் தனியார் மருத்துவமனைகள் உறுதி செய்த பின்னரே வெளிநாட்டினருக்கு உறுப்புகள் பொருத்த அனுமதி வழங்கப்பட்டதாக பாலாஜி கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற உயர் மட்ட அதிகாரிகளின் கூட்டத்தில், உடலுறுப்பு முறைகேடுகளைத் தடுக்க தமிழக அரசு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

“தமிழக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணருமான ஜோ.அமலோற்பவநாதன், உறுப்பு தான திட்டத்தில் இருக்கும்போது உடலுறுப்பு தானம் வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையான முறையிலும் நடைபெற்றுவந்தது. அவர் அந்தப் பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெற்ற பின், டாக்டர் பாலாஜியை அரசு நியமித்தது. ஏற்கனவே பாலாஜி மீது நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன.

தமிழர்கள் செய்துவரும் இந்த மகத்தான செயல் தொடர வேண்டுமென்றால், தவறு செய்யும் கார்ப்பரேட் மருத்துவமனைகளைக் கண்டறிந்து, அவர்களின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக உடலுறுப்பு மாற்றுத் திட்டத்தில் ஜோ.அமலோற்பவநாதனைப் போன்று நேர்மையான ஒருவரை நியமிக்க வேண்டும்" என்று அசோகன் கூறுகிறார்.

“0.1% தவறு நடக்கக்கூட வாய்ப்பில்லை”

"உடலுறுப்பு மாற்று விவகாரத்தில், மற்ற மாநிலங்களைவிடத் தமிழகம் 10 சதவிகிதம் சிறப்பாகச் செயல்படுகிறது. அரசு மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தால், முதலில் அவரது உடலுறுப்புகள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும். உறுப்பு மாற்றுத் தேவைக்கேற்ப மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் என எடுத்துக்கொண்டு செல்லப்படும். இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்குப் பொருந்தவில்லை என்றால்தான், வெளிநாட்டினருக்குப் பொருத்தப்படும். இவை அனைத்தும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுவதால் தமிழ்நாடு உறுப்பு மாற்றுக் கழகத்தில், 0.1% தவறு நடக்கக்கூட வாய்ப்பில்லை" என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ஆன்லைனில் பதிவு செய்து காத்திருப்போருக்கு, விதிமுறைகளுக்கு உட்பட்டு, வெளிப்படைத் தன்மையுடன் முன்னுரிமை அளிக்கப்பட்டுவருகிறது என்றும் அவர் கூறினார்.

“உடலுறுப்பு தானத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறுவதில் உள்ள புள்ளிவிவரங்கள் தவறாக உள்ளன. உரிய விதிமுறைகளின்படிதான் உறுப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தியர்கள் யாருக்கும் உறுப்பு பொருத்த முடியாத நிலை இருந்தால் மட்டுமே வெளிநாட்டவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும். நடப்பாண்டில் மே மாதம் வரை 50 இந்தியர்களுக்கும், 10 வெளிநாட்டினருக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்றும் 5,310 இந்தியர்களும், 53 வெளிநாட்டினரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர் என்றும் கூறும் புள்ளிவிவரமே தவறு. இந்தியர்கள் 150 பேர்தான் இந்தக் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். மீதி உள்ளவர்கள் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனர். இந்தியர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் உறுப்புகள் வீணாகக் கூடாது என்பதால் வெளிநாட்டினருக்கு முறைப்படி உறுப்புகள் வழங்கப்பட்டன" என்று தமிழகச் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

“உடலுறுப்பு முறைகேட்டிற்குத் தமிழக சுகாதாரத் துறையே காரணம். தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளும், தமிழக சுகாதாரத் துறையும் இணைந்தே இம்முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. எனவே, இம்முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்த மருத்துவமனைகள் மீது அங்கீகாரத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறும் இரவீந்திரநாத், “தமிழகத்தில் நடைபெற்ற இம்முறைகேட்டைக் காரணம் காட்டி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகளைப் பெற்று வழங்கும் அதிகாரத்தைத் தமிழக அரசிடமிருந்து பறிக்க மத்திய அரசு முயல்கிறது. இது மருத்துவச் சேவை வழங்குவதில் மாநில அரசின் அதிகாரத்தை, உரிமையைப் பறிக்கும் செயலாகும்” என்றும் கூறுகிறார்.

"உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடியாக உள்ளது; பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மூட்டைப் பூச்சியைக் காரணம் காட்டி வீட்டைக் கொளுத்தும் செயலை மத்திய அரசு செய்யக் கூடாது" என்கிறார் அவர்.

உடலுறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தில் உள்ளது. தானம் செய்யும் மக்கள், மருத்துவர்களின் செயல்பாடுகள் ஆகியவையே இதற்குக் காரணம். இந்நிலையில் உறுப்பு மாற்று சிகிச்சைகளில் நடக்கும் முறைகேடுகளைக் களைய நடவடிக்கை எடுத்து இந்தச் சேவை மேலும் சிறப்பாக நடக்கவே மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாகத் தனியார் மருத்துவமனைகள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு கண்காணிக்க வேண்டும். வெளிநாட்டவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக உரிய சட்டங்களை வகுக்க வேண்டும். அப்போதுதான் ஹிதேந்திரன்களின் தியாகங்கள் அர்த்தமுள்ளவையாக அமையும்.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon