மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

தேயிலை உற்பத்தி ஏப்ரலில் சரிவு!

தேயிலை உற்பத்தி ஏப்ரலில் சரிவு!

சென்ற ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி 7.21 சதவிகிதம் சரிந்துள்ளதாகத் தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் தேயிலை உற்பத்தி குறைந்ததின் விளைவாக இந்தியாவின் ஒட்டுமொத்தத் தேயிலை உற்பத்தி மதிப்பீட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது. தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2017 ஏப்ரலில் 92.41 மில்லியன் கிலோவாக இருந்த தேயிலை உற்பத்தி, 2018 ஏப்ரலில் 85.74 மில்லியன் கிலோவாகக் குறைந்துள்ளது. வடஇந்தியாவில் அதிகபட்சமாக அஸ்ஸாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தி 44.24 மில்லியன் கிலோவிலிருந்து 45.65 மில்லியன் கிலோவாக உயர்ந்துள்ளது. அதேநேரம், மேற்கு வங்க மாநிலத்தின் தேயிலை உற்பத்தி 19.6 மில்லியன் கிலோவிலிருந்து 15.73 மில்லியன் கிலோவாகக் குறைந்துள்ளது.

வடஇந்திய மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக 63.28 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்துள்ளன. ஆனால், 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் உற்பத்தி 65.86 மில்லியன் கிலோவாக இருந்தது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மொத்தம் 22.46 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்துள்ளன. 2017ஆம் ஆண்டின் மே மாத உற்பத்தி 26.55 மில்லியன் கிலோவாக இருந்தது. அதேபோல, இந்தியாவின் சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் சென்ற ஆண்டில் 43 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்திருந்ததாகவும், இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் அவர்கள் வெறும் 38.04 மில்லியன் கிலோ அளவிலான தேயிலையை மட்டுமே உற்பத்தி செய்துள்ளனர் என்றும் தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon