மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

சிறப்புப் பார்வை: யோயோ வரமா, சாபமா?

சிறப்புப் பார்வை: யோயோ வரமா, சாபமா?

முத்துப்பாண்டி யோகானந்த்

சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்களைக் கதிகலங்க வைக்கும் ஒரு வார்த்தை `யோயோ'. என்னதான் ஒரு வீரர் களத்தில் அவரது ஃபார்மை நிரூபித்தாலும் சர்வதேச அணியில் இடம்பெற யோயோ தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி.

யுவராஜ் சிங் (35 வயது), சுரேஷ் ரெய்னா (30 வயது) போன்ற அனுபவ வீரர்கள் இந்திய அணிக்குத் திரும்ப முடியாமல் தவிக்க ஒரே காரணம் இந்த யோயோ. சமீபத்தில் யோயோ தேர்வில் தேர்ச்சி பெறாத முகமது ஷமி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதில் சோகமான விஷயம் என்னவென்றால் இவர்கள் இந்தச் சோதனையில் எப்போது வெற்றி பெறுகிறார்களோ அப்போது தான் சர்வதேச அணிக்குத் திரும்ப முடியும். அதுவரை உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆட முடியும்.

வயதுக்கும் யோயோவுக்கும் தொடர்பில்லை

இவர்களுக்கு வயதாகிவிட்டதனால்தான் யோயோவில் தேர்ச்சி பெற முடியவில்லை என்று நினைப்பது மிகப்பெரும் தவறு. காரணம், யோயோ தேர்வுக்கும் வயது வரம்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 38 வயதான ஆஷிஷ் நெஹ்ரா சமீபத்தில் ஓய்வை அறிவிக்கும் முன்னர் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டி20 போட்டியில் ஆடியிருந்தார். அந்த வாய்ப்பு யோயோவில் தேர்ச்சி பெற்ற பிறகே அவருக்குக் கிடைத்தது. ஆனால், 18 வயதான வாஷிங்டன் சுந்தரால் தற்போது இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இவர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இலங்கை, வங்கதேசத்துக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடர் மற்றும் 2017ஆம் ஆண்டின் டிஎன்பிஎல் தொடர் இரண்டிலும் தொடர் நாயகன் விருதைப் பெற்றிருந்தார்.

அதேபோல் சஞ்சு சாம்சனும் யோயோ உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததால் முதலில் `இந்திய ஏ' அணியில் இருந்தும் பின்னர் இங்கிலாந்து தொடருக்கான சர்வதேச அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

யோயோ இந்தியாவுக்கு எப்படி வந்தது?

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் அனில் கும்ப்ளே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது பதவி காலத்தில்தான் இந்திய அணியில் இடம்பெற யோயோ உடல் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இவர் பதவி ஏற்று ஒரு சில மாதங்களில் கேப்டன் விராட் கோலிக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு என சர்ச்சைகள் கிளம்பின. பின்னர் 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு கும்ப்ளே தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் போன பிறகும், அவர் அறிமுகம் செய்த யோயோ தேர்வு அணியிலிருந்து போனபாடில்லை.

கும்ப்ளேவுக்குப் பிறகு தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பேற்ற ரவி சாஸ்த்ரி, யோயோ தேர்வில் இன்னும் சில கட்டுப்பாடுகளை விதித்தார். ஆனால், ராகுல் திராவிடோ இன்னும் ஒருபடி மேலே போய் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும் இந்த யோயோ சோதனையைக் கட்டாயமாக்கினார்.

யோயோ சோதனை எப்படி கடைப்பிடிக்கப்படுகிறது?

யோயோ சோதனையின்போது ABC என்ற மூன்று கோன்கள் தரையில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். அதில் Aவில் இருந்து Bக்கு 5 மீட்டர் தூரமும், Bயில் இருந்து Cக்கு 20 மீட்டர் தூரமும் இருக்கும்.

யோயோ தேர்வில் பங்கேற்கும் வீரர், முதலில் Bயில் இருந்து C வரை உள்ள 20 மீட்டர் தூரத்தை வேகமாக ஓடிக் கடக்க வேண்டும். பின்னர் Cயில் இருந்து Bக்கு அதே வேகத்தில் வர வேண்டும். இதுதான் யோயோவின் முதல் கட்டம். ஸ்பிரின்டிங் ஸ்பேஸ் எனப்படும் இந்த 40 மீட்டர் தொலைவை 14.4 விநாடிகளில் கடந்து விட வேண்டும்.

பின்னர் Bஇல் இருந்து A வரை உள்ள ரிக்கவரி தூரத்தை (5 மீட்டர்) நிதானமாக நடந்து செல்ல வேண்டும். ஆஹா, எளிதாகத்தானே இருக்கிறது. இதில் ஏன் வீரர்கள் தோல்வியடைகின்றனர் என்று நினைக்கிறீர்களா?

இனிதான் சிக்கல் ஆரம்பமாகிறது. முதல் கட்டத்தில் ரிக்கவரி தூரத்தைக் கடந்த உடன் ஒரு பீப் சப்தம் ஒலிக்கும். அதிலிருந்து வீரர்கள் தங்கள் வேகத்தை அதிகரிக்க வேண்டும். இந்த முறை 13.1 விநாடிகளில் இலக்கை அடைய வேண்டும். அடுத்த முறை 12.1 விநாடிகளில். மொத்தம் 21 சுற்றுகள் ஓடவேண்டும். அதில் கடைசிச் சுற்றை வெறும் 8.5 விநாடிகளில் கடக்க வேண்டும்.

இதில் வீரர்கள் ஒவ்வொரு சுற்றைக் கடக்கும்போதும் அதற்கான நேரமானது பின்னணியில் பதிவு செய்யப்படும். இந்தத் தேர்வின் முடிவில் வீரர்களின் செயல்பாட்டைப் பொறுத்து மதிப்பெண் வழங்கப்படும். இந்தத் தேர்வின் முடிவில் சராசரியாக 16.1 மதிப்பெண் பெற்றால் மட்டுமே இந்திய அணியில் ஒரு வீரர் இடம்பிடிக்க முடியும்.

ஒரு வீரரால் சோர்வடையாமல் எவ்வளவு நேரம் ஓட முடியும் என்பதை கணக்கிடுவதே இந்தச் சோதனையின் முக்கிய அம்சமாகும். இலக்கிற்கான தூரத்தை ஒரே தடவையில் ஓடுவதற்கும், நிறுத்தி நிறுத்தி ஓடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இதுதான் இளம் வீரர்கள் தோற்பதற்கான காரணம்.

யோயோவின் விளைவு என்ன?

யோயோ தேர்வு கடிமான ஒன்றாக இருந்தாலும்; வீரர்களின் உடற்தகுதி நிலையை அறிய அது முக்கியப் பங்காற்றுகிறது. டெஸ்ட் போட்டிகளில் வீரர்களின் அனுபவமே முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், ஒருநாள் மற்றும் டி20 போட்டி சற்று மாறுபட்டவை. இதில் அனுபவத்திற்கு இடமில்லை. இங்கு ஒரு வீரர், உடற்தகுதியுடன் நிலையான ஆட்டத்தையும் வெளிப்படுத்துவது அவசியம்.

ஒருவேளை இந்த யோயோ தேர்வு 90களில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தால் சச்சின், கங்குலி, திராவிட், கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் இந்திய அணிக்கு கிடைத்திருப்பார்களா என்பது கேள்விக்குறியே. அதேசமயம், யோயோவில் தேர்வுபெறும் இன்றைய வீரர்கள் அந்த நால்வரைப் போல ஆடிச் சாதனை புரிவார்களா என்பதும் கேள்விக்குறியே!

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon