மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

பைரசிக்குத் துணை போன தியேட்டர்!

பைரசிக்குத் துணை போன தியேட்டர்!

திரையரங்கில் இருந்து திருடப்பட்ட, ‘ஒரு குப்பைக் கதை’ திரைப்படத்தின் வீடியோ பைரசி எங்கிருந்து எடுக்கப்பட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு தயாரிக்கும் திரைப்படங்கள் பல திரையரங்கில் ரிலீஸான அடுத்த நாளே இணையதளத்திலும் ரிலீஸாகி விடுகிறது. இதனால் அவர்களுக்குப் போட்ட லாபம் கிடைப்பதில்லை. மேலும், பல மடங்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதுபோன்று திரைப்படங்களைத் திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களில் மிகப் பிரபலமானது தமிழ் ராக்கர்ஸ்.

தற்போதுள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளாக இருப்பவர்கள் தங்களது முதல் வேலையாக வீடியோ பைரசியை ஒழித்துக் கட்டுவோம் என்று குழு அமைத்தார்கள். இருந்தபோதிலும் தொடர்ந்து அவர்களும் சவால்விட்டு புதுப்புதுப் படங்களை தங்களது இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு குப்பைக் கதை என்ற திரைப்படத்தை அவ்வாறு இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதை அறிந்த படத்தின் தயாரிப்பாளர் முகம்மது அஸ்லம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில்,“ஒரு குப்பைக் கதை என்ற சமூக பொறுப்புள்ள தமிழ்த் திரைப்படம் எடுத்து கடந்த மே 25, 2018ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க திரையரங்குகளில் வெளியிட்டேன். வெளிநாட்டு உரிமை கொடுத்தால் இணையத்தில் வந்துவிடுகிறது என்று வெளிநாட்டு உரிமையைக் கொடுக்கவில்லை. தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலத்திலும் வெளியிடவில்லை. மேலும் வேறு மொழி டப்பிங் செய்தும் வெளியிடவில்லை. ஆனாலும் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவந்துவிட்டது.

மேலும் இணையத்தில் வந்த பிரதி மூலம் திருட்டு டிவிடி எல்லா இடங்களுக்கு வந்துவிட்டது. எனது பார்வைக்கு இந்தச் செய்தி வந்தவுடன் பாரிஸ் கார்னர் பகுதியில் இருக்கும் ஒரு கடையில் திருட்டுத்தனமாக விற்பனை செய்துகொண்டிருந்த எனது ஒரு குப்பைக் கதை படத்தை வாங்கினேன். பின் தியேட்டருக்குப் படம் வெளியிடும் சேவை கம்பெனியான கியூப் டிஜிட்டல் டெக்னாலஜிக்கு கொடுத்து FWM எனப்படும் பாரன்சிக் வாட்டர்மார்க் முறையில் கண்டுபிடிக்கும் வசதியைப் பயன்படுத்தி, ‘எந்தத் திரையரங்கம், எத்தனை மணிக்கு கேமரா வைத்து பிரதி எடுக்கப்பட்டது’ என்று வழங்கக் கேட்டிருந்தேன். அவர்கள் முறைப்படி ஆய்வு செய்து கீழ்க்கண்ட தகவல்களைக் கொடுத்திருக்கின்றனர்.

திரையரங்கத்தின் பெயர் மயிலாடுதுறையில் உள்ள கோமதி தியேட்டர். எடுக்கப்பட்ட நாள் 25.05.18. எடுக்கப்பட்ட நேரம் மதியம் 02.10.59 லிருந்து 04.15.52 வரை. இணையத்தில் பார்த்தபோது, திருட்டு டிவிடியில் இருந்த அதே பிரதி இருந்தது. நான் கோடிக்கணக்கில் செலவு செய்து படத்தைத் தயாரித்துள்ளேன். மேலும் 1,25,00,000க்கு மேல் செலவு செய்து ரெட் ஜெயண்ட் என்ற பெரிய நிறுவனம் மூலம் படத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தி ரிலீஸ் செய்தேன். நல்லவிதமான எதிர்பார்ப்பும் பெயரும் வந்தது. படத்துக்குப் பல இடங்களிலிருந்தும் வியாபார வாய்ப்பு வந்த நேரத்தில் இவர்கள் செய்த செயலால் பெரிய அளவில் நஷ்டப்பட்டு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருக்கிறேன். இதற்குத் தக்க நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள காவல் துறை கோமதி திரையரங்கில் பணிபுரியும் நபரைக் கைது செய்ததோடு தியேட்டரையும் தற்சமயம் மூடியுள்ளனர். மேலும் இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் விசாரணைக்குப் பின்பே தெரிய வரும்.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon