மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

வழிகாட்டும் ஈரோடு விவசாயிகள்!

நீர் மேலாண்மையில் தமிழக அரசு எவ்வளவு தடுமாற்றத்துடன் இருக்கிறது என்பதை நேற்று பார்த்தோம். ஆனால், தமிழக மக்களுக்கு நீர் மேலாண்மையில் உள்ள தெளிவும், அதற்கான அவர்களின் செயல்களையும் தொடர்ந்து கவனப்படுத்தி வருகிறோம். அவர்களின் செயல்களைச் செய்தியாக்கி அந்த வரிசையில் மிகப் பெரிய செயல்பாட்டை முன்னெடுத்திருக்கிறது ஈரோடு மாவட்டம்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே கிளாம்பாடி, பாம்பகவுண்டன் பாளையம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளது. இந்தக் கிராமங்களை சுற்றியுள்ள விவசாய நிலங்கள், மழை இல்லாததனால் கடந்த காலங்களில் கடுமையான வறட்சியைச் சந்தித்தது. விவசாய நிலங்கள் நீரின்றிக் காய்ந்தன. இந்த நிலையில், இந்த வருடம் பருவ மழை தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும், மழை நீரைச் சேமிக்கும் வழிமுறைகள் இல்லாததால், மழை பெய்தும் பயனில்லாத நிலை இருந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் அந்தப் பகுதி விவசாயிகள் அரசை எதிர்பார்த்துக் கைகட்டி நிற்காமல், தங்கள் நிலங்களைத் தானமாக அளித்து நீர் சேமிப்புக் குளம் ஒன்றை அமைத்துக்கொண்டுள்ளனர். இதற்காக 42 விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான 5 சென்டு முதல் 30 சென்டு வரையிலான 1.7 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்க முன்வந்துள்ளனர். அந்த நிலத்தின் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாய். தன்னார்வுத் தொண்டமைப்பு ஒன்றின் உதவியுடன் அங்கே குளம் தோண்டப்பட்டு வருகிறது.

விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் அரசு செயல்படவில்லை எனும் செய்திகளையே தொடர்ந்து சந்திக்க நேர்கையில், அரசை எதிர்பாராத விவசாயிகளின் இந்தத் தற்சார்பான நடவடிக்கை நிச்சயமாகக் கவனப்படுத்தப்பட வேண்டிய செய்தி, ஆவணம்.

- நரேஷ்

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon