மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

தொடரும் மோசடிகள்: வெளிவந்த உண்மைகள்!

தொடரும் மோசடிகள்: வெளிவந்த உண்மைகள்!

நீரவ் மோடி ஹாங்காங்கில் உள்ள தனது கூடு (ஷெல்) நிறுவனங்களின் டம்மி இயக்குநர்களை ஹாங்காங்கிலிருந்து எகிப்து நாட்டின் கெய்ரோ நகருக்கு இடம் மாற்றியுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற வங்கி மோசடி குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்த பிறகு நீரவ் மோடி இவ்வாறு இயக்குநர்களை இடமாற்றம் செய்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கைச் சேர்ந்த டம்மி நிறுவனமான அனுரகெனின் இயக்குநரான திவ்யேஷ் காந்தி, தான் ஆறு நிறுவனங்களின் கணக்குகளைக் கையாண்டதாகத் தெரிவித்துள்ளார். மோசடி விவகாரம் வெளியான பிறகு, அமெரிக்காவில் உள்ள நீரவ் மோடியின் உறவினர் நேஹால் மோடி, அனைத்து டம்மி இயக்குநர்களின் மொபைல்போன்களை அழித்துவிட்டு அவர்களை கெய்ரோவுக்கு இடமாற்றம் செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் திவ்யேஷ் காந்தி மீது குற்றம் சுமத்தப்படவில்லை. ஆதலால் அவர் ஒரு சாட்சியமாக உள்ளார். சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகள் குறித்த அறிவுறுத்தல்களைக் கூடு நிறுவனங்களின் ஊழியர்களுக்குத் தானாக அழியக் கூடிய மின்னஞ்சல்கள் மூலமாக நீரவ் மோடி அனுப்புவார் என்றும் திவ்யேஷ் காந்தி தெரிவித்துள்ளார். இந்த மின்னஞ்சல்கள் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு தானாக அழிந்துவிடும், சாட்சியங்களும் மிஞ்சாது.

இந்தக் கூடு நிறுவனங்களுக்கும், நீரவ் மோடியின் உறவினரான மெஹுல் சோக்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூடு நிறுவனங்களுக்கும் இடையே நிதிப் பரிவர்த்தனைகள் நிகழ்ந்துள்ளதாக திவ்யேஷ் தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் உள்ள ஆறு கூடு நிறுவனங்களின் முகவரிகள் வெவ்வேறாக இருந்தாலும், அவை குறித்த வங்கி ஆவணங்கள், விற்பனை -கொள்முதல் ஆவணங்கள், இறக்குமதி - ஏற்றுமதி ஆவணங்கள் ஒரே இடத்தில்தான் தயாரிக்கப்படும் என்று திவ்யேஷ் தெரிவித்துள்ளார். இந்த விவரங்கள் அனைத்தும் அமலாக்கத் துறையின் விசாரணையின் போது திவ்யேஷ் வழங்கியவை ஆகும். இந்த விசாரணை அறிக்கையை, இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திடம் அமலாக்கத் துறை சமர்ப்பித்துள்ளது.

நீரவ் மோடி செய்த மோசடிகளும், அவர் மீதான குற்றச்சாட்டுகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்லும் நிலையில் அவர் இங்கிலாந்தில் தலைமறைவாகியுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு அவர் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon